பாஜக 2014ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கும் இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கும் பெரியவேறுபாடுகள் இல்லை, பழையதை அப்படியேநகலெடுத்து ஒட்டி, சில வண்ணக்கோடுகளைச் சேர்த்திருக்கிறார்கள், அவ்வளவுதான் என்பதாக பலரும் மனசாட்சியின்றிப் பேசுகிறார்கள். ஆனால் இரண்டு அறிக்கைகளுக்கும்இடையே முக்கியமான சில வேறுபாடுகள்இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.முதல் வேறுபாடு - பழைய அறிக்கையின் அட்டைப்படத்தில் அன்றைய பாஜக தலைவர்கள் எல்லோரும் - வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங்,நரேந்திர மோடி உள்பட - இடம் பெற்றிருந்தார்கள். புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் அட்டைப்படத்தில் மோடிஜி மட்டுமே கைகளைக் கட்டிக்கொண்டு விவேகானந்தர் ஸ்டைலில் போஸ் கொடுக்கிறார்.பழையதில் 52 பக்கங்கள் இருந்தன, 549வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. புதியதில் 45 பக்கங்கள்தான், 75 வாக்குறுதிகள்தான். ‘என்னத்தை வாக்குறுதி அளிச்சு, என்னத்தை நிறைவேத்தபோறோம்’ என்ற எண்ணத்தால் இந்த அளவுக் குறைப்போ?2014 அறிக்கையில் நரேந்திர மோடி பெயர் ஒரு இடத்தில் கூட இல்லை.
2019ல்அவருடைய பெயர் ‘நரேந்திரா’ என்று 22 இடங்களிலும் ‘மோடி’ என்று 26 இடங்களிலுமாக மொத்தம் 48 இடங்களில் வருகிறது.ஆனால் ‘குடிமக்கள்’ என்ற சொல் 17 இடங்களிலும், ‘ஏழைகள்’ என்ற வார்த்தை14 இடங்களிலும், ‘சுகாதாரம்’ என்று 22 இடங்களிலும், ‘வளர்ச்சி’ என 14 இடங்களிலும், ‘படைகள்’ என்று 14 இடங்களிலும், ‘ஊழல்’ என்பது 11 இடங்களிலும்தான் இடம் பிடித்துள்ளன. ‘வளர்ச்சி நாயகர்’ என்று சித்தரிக்கப்பட்டவரின் படம் போட்ட அறிக்கையில் நாயகர் முன்னுக்கு வந்து, வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கைதான்.முந்தைய அறிக்கையில் 13 இடங்களைப்பிடித்த ‘வேலை’, இன்றைய அறிக்கையில்இரண்டே இடங்களில்தான் சொல்லப்படுகிறது. வெந்துபுலம்பும் வேலையற்றவர்கள் தொடர்பாக இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தார்கள் போலும். பழைய அறிக்கையில், நாட்டின்வேலைவாய்ப்பு தகவல் அலுவலகங்கள் அனைத்தும் வேலை நியமன மையங்களாக மாற்றப்படும் என்று தடபுடலாக அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அறிக்கையில் அந்த மையம் பற்றி மவுனமாக விட்டுவிட்டார்கள்.
2014ல் ‘பயங்கரவாதம்’ ஒரு பொதுவான பாதுகாப்புப் பிரச்சனையாகச் சொல்லப்பட்டிருந்தது. 2019 அறிக்கையில் அது ‘வெளியுறவுத் துறை’ என்ற தலைப்பின் கீழ்கொண்டுவரப்பட்டுள்ளது. “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக சர்வதேச அரங்குகளில் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று புதிய அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக வளர்த்துவிடப்படும் உணர்வுகளைத் வாக்குப்பதிவு எந்திர ஆதாயமாக்குகிற உள்நோக்கம் இதில் இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.முந்தையதில், விவசாயிகளுக்கு வானிலை, உலகச் சந்தை உள்ளிட்ட உண்மை நிலவரத் தகவல்களை அளித்துக்கொண்டே இருப்பதற்கான தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. உண்மை நிலவரங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவே இருக்கிற பின்னணியில், அந்தத் தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்களோ என்னவோ, தற்போதைய அறிக்கையில் அந்தத் தொழில்நுட்ப வாக்குறுதியைக் கழற்றிவிட்டார்கள்.
நினைவிருக்கிறதா, 2014 அறிக்கையின் ஒரு முக்கிய வாக்குறுதி, நாட்டில் அனைத்துநவீன வசதிகளோடும் 100 ஸ்மார்ட் நகரங்கள் கட்டப்படும் என்பது? 2019 அறிக்கையில் அந்தப் பக்கமே போகவில்லை. எவ்வளவு ஸ்மார்ட்!2014ல் ஒப்புக்காவது சொல்லிவைப்போம் என்று, ‘தீண்டாமை ஒழிக்கப்படும்’, ‘மனிதர்களே மலக்குழி இறங்கும் நடைமுறை ஒழிக்கப்படும்’ என்று சொல்லிவைத்தார்கள். துப்புரவுத் தொழிலாளிகளுக்கான சஃபாய்கரம்சாரி அந்தோலன் என்ற அமைப்பின்அறிக்கைப்படி 2016 - 2018 காலகட்டத்தில்தலைநகர் தில்லியில் மட்டுமே 429 தொழிலாளிகள் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார்கள். அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பாகிய தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி இதே காலகட்டத்தில், கழிவுத்தொட்டி வேலையின்போது உயிரிழந்த தொழிலாளர் எண்ணிக்கை 123. இந்தப் பின்னணியில் 2019 தேர்தல் அறிக்கையில் இவர்களைப் பற்றிய வாக்குறுதி எதுவுமே இல்லை.
அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்காக மின்னணு நிர்வாகத்தின் வழியாக வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படும், ‘நடவடிக்கைப் படைகள்’ அமைக்கப்பட்டு கறுப்புப்பணம் முழுவதுமாக மீட்கப்படும், கறுப்புப் பணம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக மற்ற நாடுகளுடன்செயல்பூர்வ ஏற்பாடுகள் செய்துகொள்ளப்படும் - இதெல்லாம் ஊழல் ஒழிப்பின் ஒருபகுதியாக முந்தைய அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள். ஊழல் இப்போது ரஃபேல் விமானத்தில் ஒய்யாரமாகவலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் மக்கள் சிரிப்பார்களா? ஆகவே இப்போதைய அறிக்கையில் இந்த 3 வாக்குறுதிகளை நகலெடுத்துச் சேர்க்காமல் ஒதுக்கிவிட்டார்கள்.மோடி படம் (மட்டும்) போட்ட அறிக்கையில் ‘‘இன்னொரு ஆட்சி வாய்ப்பைத் தாருங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. மேற்படி வேறுபாடுகள், “கண்டிப்பாக இவர்களுக்கு இனிஒருமுறை கூட அந்த வாய்ப்பை அளித்துவிடக்கூடாது” என்று எச்சரித்து உணர்த்துகின்றன அல்லவா?
தகவல்கள் ஆதாரம்: ‘தி குயின்ட்’ இணையப்பத்திரிகையில் இஷாதிரிதா லஹிரி எழுதியுள்ள ஒப்பீடு