மலையும், மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திற்கு சொந்தக்காரர் மயில்சாமி. கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சோளம், ராகி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செய்து வந்த விவசாயி மயில்சாமி இன்று தையல் தொழிலாளி. உழுது, பயிர் செய்து தானும் உண்டு ஊருக்கும் வழங்கிய மயில்சாமியின் விளை நிலம் இன்று பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. ஆம், கோயம்புத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகமானது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மயில்சாமிகளின் விளை நிலங்களில்தான் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்காக ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தன்னை நம்பியுள்ள மனைவி, மகன், மகள் என்ற குடும்பம் உள்ளது மயில்சாமிக்கு. அவர்களுக்காக விளை நிலத்தை இழந்த போதிலும் சுல்தானிபுரத்தில் ஒரு தெருவின் ஓரத்தில் தையல் தொழிலாளியாக மாறியுள்ளார். இவ்வாறு 2 ஏக்கர், 3 ஏக்கர், 4 ஏக்கர் என சிறு-குறு விவசாயிகள் ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரமான விளை நிலத்தை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். உப்பாத்தாள் என்ற கணவனை இழந்த விவசாயி கூறும்போது, சோறு போட்டு வந்த நிலத்தை இழந்து விட்டோம். அன்று வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அது போதுமானதாக இல்லை. எங்கு போய் யாரைப் பார்ப்பது என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க தான் வந்தாங்க. கொடிய புடிச்சுகிட்டு கலெக்டர் ஆபீஸ் போனோம். பாரதியார் காலேஜ் கேட்டுல காத்துக் கிடந்தோம். போலீசு வந்து முடுக்குனாங்க. ஒருத்தருக்கு வாசல்ல இருக்கற கதவுல கை சிக்கி காயமாயிருச்சி. ரத்தம் பொளபொளன்னு கொட்டுச்சு. அந்த போராட்டத்தில ஊரே கூடி நின்னோம். எங்கள பஸ்ல ஏத்தி கொண்டுக்கிட்டு போய் ஒரு கல்யாண மண்டபத்தில அடைச்சாங்க. இதுக்கு எல்லாம் நடராஜன் கூட நின்னாரு. அதுக்கப்புறம் கொஞ்சம் பேருக்கு பணம் குடுத்தாங்க. இன்னும் நிறைய பேருக்கு பணம் தரல்ல. மீண்டும் ஒருமுறை நடராஜன் ஜெயிக்கணும். மீதிப்பேருக்கும் பணம் வாங்கி குடுக்கணும் என்றார்.
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது எனும் சொலவடை உண்டு. எதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு உழனும், கணக்கு பாக்கணும்? விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தை நிபந்தனையில்லாம நான் எடுத்துக்கிறேன்னு கடந்த முறை பதவியேற்ற பாஜக அரசு முடிவு செய்தது. மோடி பதவியேற்ற 6 மாதங்களுக்குள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்பு இருந்த வெளிப்படைத்தன்மை இல்லை. 70 சதவீதமான விவசாயிகள் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அரசு நினைக்கும் போது எவ்வித நிபந்தனையுமின்றி நிலத்தை எடுத்துக் கொள்ளும் என பாஜக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி இப்பவும் பவர் கிரிட் நிறுவனத்தினர் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளைப் பற்றி கவலையின்றி உயர் மின் கோபுரங்கள் அமைத்தே தீருவோம். 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது என அறிவிக்கின்றனர். இதற்கு காரணம் மத்தியில் பாஜக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமே.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தங்கள் நிலத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோவணத்துடன் தலைநகரில் போராடிய போதும் கண்டு கொள்ளாத மோடி அரசு அஸ்தமனமாகும் காலமிது. அது தற்போது மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கேட்டு வந்து கொண்டிருக்கிறது. இது வீட்டில் நுழையாமல் விரட்டுவதே சிறந்தது.