election-2019

img

எழுத்தாளர்களை இழிவுபடுத்துவதா?

வாக்குச்சாவடி என்ற பகுதியில் விஞ்ஞானி ராஜுவும், வெயில் கொடுமையும் என்ற தலைப்பில் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் 27.3.3019 தீக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு உதிர்த்த, அரிய கருத்து பற்றிய கட்டுரையை படித்தேன். அந்தக் கட்டுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேட்பாளர் கிடைக்காததால் தான் “ஒரு எழுத்தாளரைப் பிடித்து ஒரு வேட்பாளர் ஆக்கி இருக்கிறார்கள்” என்று கூறி இருப்பது வருந்தத்தக்கதாகும். எழுத்தாளராக இருப்பது ஒரு கேவலமான தொழில் என்று அமைச்சர் செல்லூர் ராஜு சூசகமாக கூறி இருப்பது வருந்தத்தக்கதாகும். இந்த நாட்டின் சரித்திரம் பற்றிய அறிவு இருந்திருக்குமானால் இப்படி ஒரு அபத்தமான கருத்தை வெளியிட்டு இருக்கமாட்டார். சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமர் திரு. பண்டிட் ஜவஹர்லால் நேரு உலகறிந்த சிறந்த எழுத்தாளர். இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேத்கர் அவர்களும் சிறந்த எழுத்தாளர். இந்திய நாட்டின் விடுதலையின் சிற்பியும், தந்தையுமாக கருதப்படும் அண்ணல் காந்தியடிகள் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் மட்டுமல்ல, எழுத்தாளரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சக்கரவர்த்தி திரு. ராஜகோபாலாச்சாரியார் சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளி.


இந்திய நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி முதல் அமைச்சராக பதவி ஏற்ற தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் மலையாளத்தில் சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளரும், விமர்சகரும் ஆவார். அவர்காலம் செல்லும் வரையில் அவருடைய சிந்தனையே மலையாள மொழியின் இலக்கியப் போக்காக இருந்தது. தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான சிறந்த பேச்சாளர் தோழர் ஜீவானந்தம் அவர்கள் கவிஞர் மட்டுமல்ல, எழுத்தாளரும் கூட.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் பி.சி.ஜோசி முதல் இன்றுள்ள தோழர் சீத்தாராம் யெச்சூரி வரை உள்ளஅத்தனை பேரும் சிறந்த சிந்தனை யாளர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர் களும் ஆவார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.


கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் எந்த முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விபரம் தெரிந்திருந்தால் அமைச்சர் செல்லூர் ராஜு இப்படி சொல்லி இருக்கமாட்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர் கேட்டு வாங்கப்படுவதல்ல, கட்சியால் தேர்வு செய்யப்படுவதாகும்.ஒரு எழுத்தாளன் என்பவன் அவன் தாய் மொழி, இனம், தொன்மை, சரித்திரம், பண்பாடு, நாகரீகம், மனித சிந்தனை, அத்தனையையும் அறிந்து கணக்கிடகூடியவன் ஆவான். உண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சு.வெங்கடேசனை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தி இருப்பதன் மூலம் படைப்பாளிகளை கௌரவித்து இருக்கிறது. இது பாராட்டுக்குரி யது. இந்த உண்மை தெரியாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற மட்டில் அமைச்சர் செல்லூர்ராஜு உளறி இருக்கிறார் இது கண்டிக்கத்தக்கது.


டி.செல்வராஜ், 


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்