கோவை, ஏப்.1 -
மோடியின் எதிர்ப்பலை நாடு முழுவதும் எதிரொலித்து வருகிற நிலையில் அதனோடு கூட்டணி வைத்துள்ள உள்ள அதிமுக காணாமல் போகும் என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் உரையாற்றினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்டார். கோவை இடையர்பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய பிரச்சார இயக்கம் கோவில்மேடு பிரிவு, கிரிநகர், கவுண்டம்பாளையம் சரவணாநகர், கே.என்.ஜி.புதூர், சுப்பிரமணியம்பாளையம், கவுண்டர்மில் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த பிரச்சார இயக்கத்தில் திமுக சார்பில் திமுகவின் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் திமுக நிர்வாகிகள் பையா கவுண்டர், அறிவரசு, மாலதி, காங்கிரஸ் கட்சியின் மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், எஸ்.பச்சைமுத்து துடியலூர் பாபு, எஸ்.பி.பச்சைமுத்து, ஆர்.வி.சி. மதிமுக தியாகராஜன், முத்துசாமி, வெ.சு.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி, ஜீவா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சுபாஸ், ஸ்ரீபதி, கனகரத்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தம்பி வினோத், கண்ணகி, தமிழ்புலிகள் சுரேஷ், கோவை வீரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, என்.பாலமூர்த்தி, வி.பெருமாள், ஆர்.கேசவமணி, ராஜலட்சுமி, செந்தில்குமார், மற்றும் எம்எம்கே, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, திக,திவிக, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை மற்றும் விவசாய அமைப்புகளை சார்ந்த கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தில் பங்கேற்றுள்ள சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வளர்ச்சி குறித்து வாய் கிழிய பேசி மோடி அதிகாரத்திற்கு வந்தார். ஐந்தாண்டு ஆட்சியின் நிறைவில் இவர் பேசிய வளர்ச்சி அம்பானிக்கும், அதானி போன்ற கார்ப்ரேட்டுகளுக்கும் என்பது இப்போது மக்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆகவே நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை வீசுகிறது. தமிழகத்தின் உரிமைகளை பறித்து மாநில அரசை அடிமைபோல நடத்தும் மோடியை தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதன்விளைவாகவே கோபேக் மோடி என்பது உலகளவில் வலைத்தளத்தில் டிரெண்டிங்காக மாறியுள்ளது. இந்நிலையில் ஊழல் செய்த சொத்துக்களை பாதுகாக்கவும், பதவி சுகத்தை அனுபவிக்கவும், சுயநலத்திற்காக பாஜகவோடு கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவும் மோடியின் எதிர்ப்பலையில் காணாமல் போகும் நிலை இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றம் என்பது தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை சுயமரியாதை கொள்கையை உயிராக கருதும் தமிழகம் பயன்படுத்திக்கொள்ளும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள நாங்கள் ஜனங்களின் பிரச்சனைகளை பேசுகிறோம். விலைவாசி உயர்வு, வேலை பறிப்பு, விவசாயம் அழிப்பு, சிறுகுறு தொழில்கள் நசிவு, சிலிண்டர் விலை உயர்வு, கேபிள் கட்டண உயர்வு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு குறித்து தேர்தல் பரப்புரையில் ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி கேட்கிறோம். எங்கள் கேள்வியின் நியாயத்தை மக்கள் உணர்ந்து எங்களை ஆதரிக்கிறார்கள் ஆராத்தி எடுக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் உள்ள எதிரணியுள்ளவர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்ப அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்திலும், கார்ப்ரேட்டுகளின் உழைப்பு சுரண்டலை எதிர்த்த போராட்டத்திலும் சமரசமில்லாத போராட்டத்தை மேற்கொள்ளும் இடதுசாரி கட்சிகள் இதனை எப்போதும் எதிர்கொண்டே வந்திருக்கிறது. இன்றுள்ள அரசியல் சூழலை மக்கள் தெளிவாக புரிந்துள்ளார்கள். மத்தியில் மோடி அரசை மக்கள் தோற்கடிக்கப்பார்கள். மாநிலத்தில் எடப்பாடி அரசு வீழும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்றார்.
முன்னதாக இந்த பிரச்சார பயணத்தில் நூற்றுக்காண கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.