election-2019

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆர்எஸ்எஸ் ஆட்களை கல்வி நிறுவனங்களில் புகுத்துவது, பாடத்திட்டத்தில் மதச்சார்பை கொண்டுவருவது போன்ற நடவடிக்கை மூலம் நாட்டில் கொந்தளிப்பு நிகழ்ந்ததைப் பார்த்தோம். அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை பல்கலைக்கழகத்தில் தடைவிதித்தது பிஜேபி அரசு. உயர் கல்விக்கான நிதியை வெட்டிச் சுருக்கியது, எந்தவித கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கும் முன்பே அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் கோடியை மோடி அரசு தூக்கிக் கொடுத்த கொடுமையும் நடந்தேறியது. இதே காலக்கட்டத்தில் தான் நாடு முழுவதும் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூல் செய்வதற்குத் தனியார் நிறுவனமான அம்பானியின் ரிலையன்சிடம் பிஜேபி அரசு கொடுத்தது. இதன் விளைவு ரிலையன்ஸ் நிறுவனம் கந்துவட்டிக் குண்டர்களை போல கல்விக்கடன் பெற்ற மாணவர்களையும் அவர்களது குடும்பத்தையும் மிரட்டியதால் மதுரை மாணவன் லெனின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் மூன்று உயிர்களை நரபலி கொடுத்தது மோடி அரசு. 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது.15 லட்சம் வங்கியில் செலுத்துவோம், விலை உயர்வை கட்டுப்படுத்துவோம், விவசாயப் பொருட்களுக்கு இடுபொருள் கூலியுடன் சேர்த்து ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்வோம் போன்ற வாக்குறுதிகளை காலில் போட்டு மிதித்தது மத்திய பிஜேபி அரசு. 


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என முழங்கியது. வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டப்பொழுது, மோடி பக்கோடா விற்றுப் பிழைப்பதும் வேலை தான் என இந்திய இளைஞர்களை கேவலப்படுத்திய கொடுமையும் நடந்தேறியது. தமிழகத்தில் அதிமுக அரசு அரசாணை 56 என்ற ஒன்றை வெளியிட்டு இனி அரசு காலிப்பணியிடங்கள் அனைத்தும் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்கின்ற பெயரில் அத்தக் கூலிக்கு ஆள் எடுப்பதாக அறிவித்தது. தற்போது அரசாணை வெளியிட்டு 1500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டு படித்த இளைஞர்களின் வயிற்றில் அடித்த கொடுமையை நிகழ்த்தியுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது பொதுத்துறையில் வேலையிலிருந்த நிரந்தரப் பணியாளர்களை ஓய்வு பெற்ற பின் அந்தப் பணியிடங்களுக்கு தற்காலிக பணியிடம் என பெயர் சூட்டி அத்தக் கூலிக்கு ஆள் எடுக்குற வேலையையும் செய்தது. மேலும் ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்தும் வேலையிலும் ஈடுபட்டது. தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு ரயில்வே தபால் துறை உள்ளிட்டத் துறைகளில் வேலை கிடைப்பதில் மோடி அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த இடங்களை பிடித்துள்ள அவலமும் அரங்கேறியுள்ளது. எனவே எதிர்காலத்தில் மத்திய அரசுப் பணியிடங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை மாநில அரசுகள் சட்டமாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்த பொழுதும் மாநில அதிமுக அரசு தன் அதிகாரத்தையும் பதவியையும் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசின் கைப்பாவையாகவும் கள்ள மவுனம் சாதித்து வந்தது. 


பிஜேபி ஆட்சியில் தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் வேலையின்மை விகிதம் 7.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட விவரங்கள் மத்திய, மாநில அரசுகள் வேலை கொடுப்பதில் படுதோல்வி அடைந்து இருக்கக்கூடிய விவரங்களை தெரிவிக்கிறது மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மதச் சிறுபான்மையினர் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட பசுக்களின் தாக்குதல் மிகவும் கொடூரமானது. தமிழகத்தில் ஒக்கி, கஜா புயலின் போது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து துயரத்தில் இருந்த தருணத்தில் மத்திய அரசிடம் கேட்ட நிதியைக் கூட தர மறுத்தது மத்திய பிஜேபி அரசு. அதைக் கேட்டுப் பெறுவதற்கு உரிய கவனம் செலுத்தாத மாநில அதிமுக அரசு. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் நின்றதையும் பார்த்தோம். இத்தகைய கொலை பாதகச் செயலை தமிழக மக்கள் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள். 17 வயதான ஸ்னோலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுக் கொல்லப்பட்டதும், 17 வயதான அனிதா நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், கல்விக் கடனை வசூலிப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை அனுமதித்ததன் விளைவாக 23 வயதான இளைஞன் லெனின் வெறும் ஒரு லட்ச ரூபாய் கடனுக்காக தன்னுயிரை போக்க வேண்டிய நிலையை உருவாக்கியது என எத்தனையோ கொடுமைகளை தமிழக இளைஞர்கள் சந்தித்துள்ளனர். வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணமாக எம்.டெக் படித்த இளைஞன் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதும் மேலும் ஒரு கொடூரமான நிகழ்வாகும்.எனவே தமிழக மக்கள் பிஜேபி, அதிமுகவுக்கு எதிராகக் களம் காணும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வருகிற 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்து ஜனநாயகத்தைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. 


- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து..

;