election-2019

தேர்தலையொட்டி பேருந்துகள் இயக்கப்படாதது ஏன்?

சேலம், ஏப்.19-வாக்களிக்கச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதிகள் செய்துதரப்படாத நிலையில், இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக மிக அலட்சியமாக விளக்கம் அளித்துள்ளார்.தமிழகம் முழுவதும் வியாழனன்று மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற சூழலில், அதனையொட்டி 3 நாட்கள் விடுமுறையும் சேர்ந்து வந்ததால் சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக புதன் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் சொற்ப பேருந்துகளே இயக்கப்பட்டதால் கடும் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதிகாலையில் அடுத்தடுத்து சில பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பயணிகள் பேருந்துகளின் மேற்கூரைகளிலும் அமர்ந்துகொண்டு பயணித்தனர்.


இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் வெள்ளியன்று (ஏப்ரல் 19) செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். “தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஏற்கனவே சென்றுகொண்டிருந்த பேருந்துகள் அந்தந்த வழித்தடத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. திடீரென கூடுதல் பேருந்து வசதிகள் செய்ய முடியாது அல்லவா? தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம்தான் செய்துகொண்டிருக்கிறது” என்று அலட்சியமாக தெரிவித்தார்.பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் கூடுதல் பேருந்து வசதி செய்துத்தரப்படும் என்று குறிப்பிட்ட முதல்வர், “தற்போதும் கூடுதல் பேருந்து வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. அனைத்திலும் அரசாங்கம் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர் விடுமுறை காரணமாக அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டிய சூழல் வந்ததால், இப்படிப்பட்ட இடர்பாடு ஏற்பட்டது. அதனையும் அதிகாரிகள் சரிசெய்துவிட்டனர்” என்று கூறினார்.

;