election-2019

img

கடந்த காலப் போராட்டங்கள், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவை குறித்ததாகவே இந்த தேர்தல் இருக்கப் போகிறது - கன்னையாகுமார்

கடந்த காலப் போராட்டங்கள், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவை குறித்ததாகவே இந்த தேர்தல் இருக்கப் போகிறது

கன்னையா குமார், பீகாரில் பெகுசராய் பாராளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிகிறார்.

image.png

 

இந்தியாவிற்குத் தேவையான மாற்று அரசியல் என்பது வெறுமனே ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக மட்டும் அல்லாமல், சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டமாகவும் இருக்கிறது. ஹிந்துத்துவப் பேரினவாதத்திற்கு எதிரானதாக இருப்பது மட்டுமல்லாது, அம்பேத்கரின் சமூக உள்ளுணர்வுகளுக்கானதாகவும் இருக்கிறது. கும்பல் ஆட்சியை எதிர்ப்பதாக இருப்பது மட்டுமல்லாது, உண்மையிலேயே பங்குபெறுகின்ற ஜனநாயகமாக இருக்கிறது. 

 

ஒரு தற்செயலான அரசியல்வாதியாக எப்போது நான் மாறினேன் என்பதை உணர முடியாத அளவிற்கு சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. அரசியல் சார்ந்தவனாக எப்பொழுதுமே நான் இருந்து வந்தாலும், பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது கூறியிருந்தால், நானும் என்னுடைய நண்பர்களும் அதைக் கேட்டு உண்மையிலேயே சிரித்திருப்போம்.

இலக்கியம் சார்ந்தோ, மனநிலை சார்ந்தோ, அமைப்பு சார்ந்தோ எடுத்துக் கொண்ட பயிற்சியால் நான் கோட்பாட்டாளனாக இருக்கலாம். ஆனாலும் வன்முறைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்ற சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே வேறெதையும்விட நான் ஒரு செயற்பாட்டாளனாகவே இருக்கிறேன்.தற்போதைய ஆட்சியின் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அரசியலுக்கு இப்போது வந்து சேர்ந்திருந்தாலும், நான் இன்னும் ஒரு அரசியல்வாதியாக மாறி விடவில்லை.

வெறுப்பு மற்றும் அடக்குமுறையை எதிர்த்து நின்று போரிடுகின்ற ஒரு அரசியல், நம்மைப் பிரித்து வைக்கின்ற சக்திகளிலிருந்து விலகி நிற்கிற இந்தியாவைக் கனவில் கொண்டு, நம்மைப் பிணைக்கின்ற சக்திகளைக் கொண்டாடுகின்ற ஒரு அரசியல், தனிமனித உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முற்போக்கான சிந்தனைகள் போன்றவற்றை உண்மையாக மதிக்கின்ற சமுதாயத்தைக் கனவில் கொண்ட ஒரு அரசியல், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏற்பட்டிருக்கும் சேதங்களிருந்து மீட்டெடுப்பது என்று மட்டுமில்லாமல், வரவிருக்கின்ற வாய்ப்புகளை அடைகின்ற வகையில் வலுவான ஜனநாயகத்தின் மீது கனவு கொண்ட ஒரு அரசியலாக இருக்கின்ற மாற்று அரசியலில் பங்காற்ற வேண்டிய சமூகப் பொறுப்பு எனக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன் அதற்காகவே நாம் போராடுகிறோம். இதுவே என்னுடைய கதை.

நான் யாராக இருக்கிறேன் என்பது இங்கே முக்கியமானதாக இருக்கப் போவதில்லை. என்னைச் சுற்றி இருந்த பெரும்பாலான மக்களைப் போலவே நான் எப்போதும் இருந்து வருகிறேன். பள்ளியில், போலியோ சொட்டு மருந்து கொடுத்தேன்; கல்லூரியில், பயிற்சி வகுப்பில் வேலை பார்த்தேன்; டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்துகின்ற தேர்விற்கு படித்துக் கொண்டிருந்த போது, வேலை ஒன்றையும் உடன் செய்து வந்தேன். அந்தப் பயிற்சி வகுப்புகளுக்கான பணத்தை அசாமில் காவலராகப் பணியாற்றி வருகின்ற என் உடன்பிறந்த சகோதரர் எனக்கு அனுப்பி வந்தார். அரசாங்கம் இந்த தேர்வுகளோடு சீசாட் (CSAT) தேர்வுகளையும் இணைத்ததால் குடிமைப் பணிகளில் சேருவதற்கான வாய்ப்புகளை நான் இழக்க வேண்டியதாயிற்று. சீசாட் தேர்வுகள் ஹிந்தி வழியில் பயின்ற மாணவர்களுக்கான சாத்தியத்தைக் கொண்டு வந்தது. அனைத்திந்திய சேவைகளுக்குள் நுழைகின்ற வாழ்வியல் புலம் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை புறக்கணிக்கப்படுகின்ற அளவிலேயே இருந்து வந்தது. அந்த சீசாட் வகுப்புகளுக்கன கட்டணத்தை என்னால் செலுத்த இயலவில்லை. ஆனால் என்னிடம் அது குறித்து எந்த வருத்தமும் இருந்ததில்லை. யுபிஎஸ்சி தேர்வுகளுக்குப் பயின்று வந்த போதுதான் என்னிடம் கல்வி மற்றும் அரசியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டது. அதுவரையிலும் நான் மிகச் சாதாரணமானவனாகவே இருந்து வந்தேன்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்த போது, ஆய்வுகளின் மூலம் என்னுடைய மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை ஜேஎன்யூ என்பது வெறுமனே ஒரு நிறுவனமாக மட்டும் இருக்கவில்லை. புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல், வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், சமூக இயக்கங்களிலிருந்தும் ஒருவர் சுதந்திரமாகக் கற்றுக் கொள்ளக்கூடிய இடமாக, சொந்தமாக வாழக் கற்றுக் கொள்வதற்கான இடமாகவே அது இருந்தது. செயல்முனைவுகளுக்கு எப்போதும் முன்னுரிமை தரக்கூடிய இடமாக அது இருந்தது. மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்ட போது கூட, அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அதிலிருந்து என்னுடைய வாழ்க்கைப் பாதை முற்றிலும் மாறி விட்டது.

என்னுடைய அரசியல் பயணத்தின் போது, தங்களுடைய அதிகாரத்தை தவறுதலாகப் பயன்படுத்தியவர்களை எப்போதும் விமர்சனம் செய்து, அவர்களிடம் கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். முந்தைய ஆட்சிகளிலிருந்து முற்றிலும் வேறாக தற்போதைய ஆட்சி இருக்கிறது. காவல்துறையின் அச்சுறுத்தல்கள், தடியடி போன்றவை இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அவதூறாகப் பேசுவது, போலியான செய்திகள், முழுமையான வெறுப்பு, தேசவிரோதம் என்பது போன்ற சொல்லாடல்கள் போன்றவை மிகவும் புதியவையாக இருக்கின்றன. 'அரசியல் மீது நீங்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு, அரசியல் உங்கள் மீது ஆர்வம் காட்டவில்லை என்று பொருளாகாது’ என்று பெரிகிள்ஸ் கூறிய முதுமொழி சொல்கிறது. நான் அரசியல் மீது ஆர்வம் காட்டினேன். அரசியல் நிச்சயமாக என் மீது ஆர்வம் கொள்ளும்.

எங்கள் மீது அரசு தாக்குதலை நடத்திய போது, போராட வேண்டும் அல்லது சரணடைந்து விட வேண்டும் என்று நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான இரண்டு வாய்ப்புகள் எங்களுக்கு முன்பாக இருந்தன. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் போராடுவது என்கிற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருந்தது. எனவே நாங்கள் போராடினோம். அந்தப் போராட்டமே இன்றைக்கு என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலமைக்கோ அல்லது அந்தக் கட்சிக்கோ மாற்று என்பதாக என்னை முன்னிறுத்திக் கொள்வதற்கு நான் இங்கு வரவில்லை. இந்த நாட்டின் மாற்று அரசியல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டவே நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த மாற்று அரசியல் என்பது வெறுமனே ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக மட்டும் இல்லாமல், சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டமாகவும் இருக்கிறது. ஹிந்துத்துவப் பேரினவாதத்திற்கு எதிரானதாக இருப்பது மட்டுமல்லாது, அம்பேத்கரின் சமூக உள்ளுணர்வுகளுக்கானதாகவும் இருக்கிறது. கும்பல் ஆட்சியை எதிர்ப்பதாக இருப்பது மட்டுமல்லாது, உண்மையிலேயே பங்குபெறுகின்ற ஜனநாயகமாக இருக்கிறது. இது என்னுடைய போராட்டம் அல்ல. நம்முடைய போராட்டம்.

எதிர்காலத்திற்கான நமது பார்வை

பணக்காரர்களின் பைகளுக்குள் இருக்கின்ற அரசியலை சாதாரண வரி செலுத்துபவர்களின் கைகளிலே கொடுப்பதே எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கான முதல் படியாக இருக்க வேண்டும். நமது விவாதங்களிலிருந்து வரி செலுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி அளிக்கின்ற ஒருவரின் பிரச்சனைகள் முற்றிலும் விடுபட்டுப் போயுள்ளன. அது ஏன்? ஏனெனில் இந்த அரசு வரி செலுத்துபவருக்காக இயங்குகின்ற அரசாக இல்லாமல், செல்வந்தர்களுக்கான அரசியல் இயந்திரமாக இருக்கின்றது. இது போன்ற அமைப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். அரசாங்கத்தை மக்களிடமே திரும்பவும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

பிரச்சனைகளில் அடிப்படையிலான மாற்று அரசியலை நிறுவுவது இரண்டாவது படியாக இருக்க வேண்டும். பொதுக்கல்வி, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து நாம் அவசியம் பேச வேண்டும். சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது, திருநங்கைகள் மற்றும் ஓர் பாலினத்தவர் என்று அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் நாம் பேச வேண்டும். ஆணாதிக்கத்திற்கெதிராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் நாம் பேச வேண்டும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் புரட்சி, தனிநபர் உரிமை குறித்து நமது நாடு எதிர்கொண்டிருக்கும் புதிய சவால்களைப் பற்றி நாம் பேச வேண்டும். மிக முக்கியமாக, இந்த மாற்று அரசியலை அடிப்படையாகக் கொண்டு, நாம் அமைப்புகளை ஏற்படுத்தி, அழுத்தங்களைக் கொடுத்து வாக்களிக்க வேண்டும்.

இறுதியாக நடைமுறையிலிருந்து நமது ஜனநாயகத்தை பங்களிப்புச் செய்வதாக நாம் இந்த மாற்று அரசியலின் மூலமாக மாற்றி வடிவமைக்க வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான புதியதொரு கட்டமைப்பை உருவாக்க உதவுகின்ற இந்த மாற்று அரசியல் என்பது, பொறுப்புள்ள மற்றும் வெளிப்படையான, மிக முக்கியமாக அனைவரையும் உள்ளடக்கிய அரசியலாக இருக்கும். விளிம்பு நிலையில் இருப்பவர்களின் குரலைக் கவனித்து, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையை உரத்துப் பேசுவதாக இது இருக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பேசுவதற்கு, அமைப்புரீதியாகத் திரள்வதற்கு, தேர்தலில் போட்டியிடுகின்ற வகையில் உண்மையான பங்கினை அளிப்பதற்கு இந்த அரசியல் நிற்க வேண்டும். காலத்தைக் கடந்து நிற்கிற ஜனநாயகத்தை, கடந்த காலங்களில் நிறைவேறாமல் இருந்த கனவுகளை எதிர்காலத்தில் இந்தியா அடைவதற்கான ஜனநாயகத்தைக் கட்டமைக்க இத்தகைய கட்டமைப்பால் மட்டுமே முடியும்,

போராடுவோம். வெற்றி பெறுவோம்.

 

நன்றி: https://thewire.in/politics/kanhaiya-kumar-writes-between-the-struggles-of-the-past-and-our-hopes-of-the-future

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்

;