education

img

சிறுகதை- ஊர் காவல் தெய்வம்

அந்த ஊரின் எல்லையில் ஆத்தங்கரை ஓரத்தில் தான் அந்த கோவில் உள்ளது. சில பேர் அதை வாமினியார் என்று கூட அழைப்பார்கள். அதற்குக் காரணம் அந்த சிலை வானத்தை எட்டும் அளவுக்கு உயரமாக இருக்கும். பகல் நேரங்களில் அங்கு தனியாக போகவே பலம் வாய்ந்தவர்கள்கூட பயப்படுவார்கள். ஆறு மணிக்கு மேல அந்தப்பக்கம்கூட யாரும் தலை வைத்துப் படுக்கமாட்டார்கள். ரொம்ப  துஷ்டமான தெய்வம் என்பார்கள். பக்தர்கள் வேண்டும் கோரிக்கை எல்லாம் நிறைவேறும் என்பார்கள். முன்பெல்லாம் வருசத்துக்கு ஒரு முறை திருவிழா வரும். அதன்பிறகு அங்கு யாருமே போகமாட்டார்கள். இப்போது அப்படி அல்ல. தினமும் வெளியூர் ஆட்கள் வருவார்கள், அர்ச்சனை செய்வார்கள். கோழி குழம்பு வைத்து படையல் போடு வார்கள். கடா வெட்டி அன்னதானம் என்ற பெயரில் அவங்க உறவினர் களே உண்டு மகிழ்வார்கள். மிச்சம் மீதி இருந்தா ஏழைகளுக்கு தருவார்கள். அந்தச் சோறு வாங்கவே சிலபேர் அங்கே வருவதுமுண்டு. கோவிலின் வாசலில் பெரிய பூட்டுப் போட்ட ஒரு உண்டியலும் சிவப்பு கலரில் பயமுறுத்தும் வெளியூர் பக்தர் கள் சில்லரைமாத்தி பெருமையாக போடுவது வழக்கம். அப்படித்தான் போன வெள்ளிக் கிழமை பூஜை வைக்கப்போன பூசாரி அரக்கப்பரக்க ஊருக்குள் ஓடிவந்தார். எல்லோரும் பூசாரிக்கு சாமி வந்து அருள்வாக்குச் சொல்ல ஓடி வருவதாகவே நினைத்தார்கள். எல்லாரும் என்ன சாமி, என்ன சாமி என்று கேட்டார்கள். அவரு ஓடிவந்த கலைப்பு தீர மூச்சை இழுத்து ஆசு வாசப்படுத்திக்கொண்டு சொன்னார், நம்ம ஊர் காவல் தெய்வம் வாமினி யார் உண்டியலை யாரோ உடைத்துக் கொண்டு போய்விட்டார்கள். இப்போ என்ன செய்வதென்று புலம்பினார்.

சில அந்த திருடனுக்கு நம்ம காவல் தெய்வம் கூலிக்கொடுக்கும் சாமி என்று ஆறுதல் சொன்னார்கள், பலர் போலீஸுக்கு போகலாமென்று புத்திமதி சொன்னார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருசிலர் இவனே ஆட்டைய போட்டிருப்பானோ என்று மெல்லியக்குரலில் முணுமுணுத்தார் கள் கடைசியாக போலீஸுக்கே போக லாமென்று ஒருமனதாக முடிவெடுத் தார்கள். எல்லாரும் போலீஸ் ஸ்டேசன் வாச லில் குழுமியிருந்தார்கள் வாட்டம் சாட்டமான அந்த இன்ஸ்பெக்டர் நுழையும்போதே எல்லோரையும் கண்களால் அளவெடுத்தார். சீட்டில் உட்கார்ந்தப்படி என்ன பிரச்சனை என்றார். வந்தவர்கள் பிரச்சனையை சொன்னார்கள். முதலில் யாரு  அந்த உண்டியல் களவு போனதைப் பார்த்தது என்றார். எல்லோரும் கோரசாக பூசாரி என்றார் கள். எல்லாத்தையும் கேட்டவர் சரி, சரி ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக்கொடுத்தி விட்டு போங்க விரைவில் திருடனை பிடிக்கலாம் என்றார். சரின்னு எழுதிக் கொடுத்துவிட்டு நகரும்போது இன்ஸ்பெக்டர் சொன்னார், அந்த கோவில் ஊர் எல்லையில் தனியாக காட்டுக்குள்ள இருக்கு நானும் பலமுறை வந்திருக்கிறேன். இரவில் ஒரு வாட்ச்மேன் போடலாமே அதை  ஏன் செய்யமாட்றீங்க, அதுசம்மந்த மாக யோசிங்க, பூசாரி ஊர் பெரிய வங்கள கலந்து ஆலோசிங்க... நாங்க  அவனை கண்டுப்பிடுத்து நடவடிக்கை  எடுக்கிறோம் நீங்க கவலப்படாமல் போங்க என்றார்.

வரும் வழியில் அந்த கூட்டத்தில்  வந்தவர்களில் ஒருவர் சொன்னார். பகலிலே அந்தப்பக்கம் எவனும் போக மாட்டானுங்க இதுல இரவு வாட்ச்மேன் வேலை எவன் பார்ப்பான். ஊர் காவல் தெய்வம் ஊரையெல்லாம் பாது காப்பது அதோட உண்டியலை பாது காக்காதோ இதுக்கு மனுசன்தான் போய் ராத்திரியில் காவல்காத்து பயந்து சாகணுமா... அதற்கு கும்பலில்  ஒருவர் சொன்னார். அப்படி துடுக்கா பேசாத தம்பி சாமி உண்டியலை காவல்காக்க போறவனை சாமி ஒன்னும் செய்யாது அவனை காப் பாத்திடும் என்றார். அதற்கு அவர்  சொன்னார் “ஊர் காவல் தெய்வம்  முதலில் தன்னை காப்பாத்திக்கொள் ளட்டும்”