economics

img

இந்திய விமானங்களில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயர்வு 

கடந்த மே மாதத்தில் இந்திய விமானங்களில் கொரோனா தொற்று காலத்திற்கு முந்தைய நிலையை விட அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஐசிஎம்ஆர் என்ற கிரெடிட் ஏஜென்ஸி ஜூன் 7 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய விமானங்களில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 2.2 மில்லியன் ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு சீரடைந்த பின்னர் விமானங்களை மீண்டும் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிக பயணிகள் பயணம் செய்தது மே மாதத்தில் தான் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு முன்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் 24 சதவிகிதம் சர்வதேச பயணிகளை விமான நிறுவங்கள் அதிகமாக பயணம் செய்ய வைத்துள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2022 மே மாதத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முந்தைய நிலையை விட 7 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2022 மே மாதத்தில் இந்தியாவில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையை 11.4 மில்லியன் என்று கணக்கிட்டுள்ளது. 

2022-23 ஆம் ஆண்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து மந்த நிலை காரணமாக விமான நிறுவனங்கள் சில சலுகை அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த 12 மாதங்களில் 18 முதல் 20 சதவிகிதம் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்ததும் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், இந்தியாவிலிருந்து தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. விமான பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வலுவான மற்றும் சலுகை நடவடிக்கைகளை எடுக்க விமான நிறுவனங்கள் தயாராகி வருவதாகவும், கொரோனா தொற்று பாதிப்புக்கு முந்தைய நிலைகளிலிருந்து, அதிக சதவிகித பயணிகள் வரும் ஆண்டுகளில் பயணம் செய்வார்கள் என்றும் ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.