இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், குறிப்பாக அன்னிய முதலீட்டிலும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து அரசும், அரசு அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய பொருட்களுக்கான வர்த்தக இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் இந்த anti-minority முகம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதிலும் பெரும் பிரச்சனையாக இருக்கும். மேலும் இந்தியா நம்பகத்தன்மையற்ற கூட்டணி நாடாகவும் உலகளவில் பார்க்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா வலிமையான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாட்டின் அடிப்படையான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவது இந்தியாவுக்குத் தான் பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஜனநாயகம் அடிப்படையில் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே மனநிலையில் நடத்தினால் கட்டாயம் சர்வதேச சந்தையில் இந்தியா மீதும், இந்திய தயாரிப்புகள் மீதும் மதிப்பு அதிகரிக்கும். இதனால் தானாக இந்தியாவின் வர்த்தகம் உலக நாடுகளில் அதிகரிக்கும்.
இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகள் தங்களது நட்பு நாடுகளை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றை முக்கியக் காரணியாகக் கொண்டு தான் முடிவு செய்கிறது என, ரகுராம் ராஜன் டெல்லி ஜஹாங்கீர்புரியில் வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களின் வீடுகளை ஆர்எஸ்எஸ்-பாஜக புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.