economics

img

சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் இருக்காது - இந்தோனேசியா

இந்தியாவில் பயன்படுத்தும் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய்யில் 40 சதவிகித பாமாயில், இதில் 60 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 

முக்கியமாக இந்தியா, பாமாயிலை அதிகளவில்  இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வெள்ளியன்று வெளியிட்ட அறிவிப்பில் பாமாயிலின் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான எண்ணெய் தன்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியை மொத்தமாகத் தடை செய்ய உள்ளதாக அறிவித்தார். 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய மக்கள் அவசர அவசரமாக அதிகளவிலான பாமாயிலை வாங்கி குவிக்கத் துவங்கினர். அதிகப்படியான டிமாண்ட் காரணமாக ரீடைல் சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடந்த 2 நாட்களில் அதிகளவில் உயர்ந்தது.  இந்நிலையில் இந்னேசியா அரசு முக்கியமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் fefined, bleached மற்றும் deodorized பாமாயில் மீது மட்டுமே ஏற்றுமதி தடை இருக்கும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் இருக்காது என அறிவித்துள்ளது. 

இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இந்தோனேசியாவில் எப்போதும் போலேவே எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுத்திகரிக்கப்படாத பாமாயிலை இறக்குமதி செய்யலாம். ஆனால் சுத்திகரிப்புப் பணிகள் அதிகமாகும். இதனால் பாமாயில் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட பாமாயில் தடை ஏப்ரல் 28 ஆம் தேதி நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே உக்ரைன் போர் காரணமாக சமையல் எண்ணெய் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவின் அறிவிப்பும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தற்போது முக்கியமான பிரச்சனை குறைந்துள்ளது.