புதிய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்ட 1991 ஆம் ஆண்டு முதலே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான திட்டத்தை அன்றைய நடுவண் அரசு மேற்கொண்டது. பாஜக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் தனியார்மய கொள்கைகள் முன்னுக்கு வந்தன. குறிப்பாக 2014 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான பாஜக அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மடை மாற்றுவதற்கான கொள்கை முடிவை அசுரவேகத்தில் நடத்த எத்தனிக்கிறது. இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் 2 பொதுத்துறை வங்கிகளை முழுமையாக தனியாருக்கு விற்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு மடை மாற்றுவதற்குமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவிர மேலும் பல தனியார்மய முன்னெடுப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.பாஜக அரசின் இத்தகைய கொள்கை முடிவினை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கங்களும் அதிகாரிகள் சங்கங்களும் யுஎப்பியு எனும் பதாகையின்கீழ் இரண்டு நாட்கள், மார்ச் 15, 16 - 2021 அகில இந்திய வேலைநிறுத்தத்தினை மேற்கொள்ள உள்ளனர்.
தேசியமயத்தை எதிர்த்த ஜன சங்கம்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே வங்கிகள் தனியார் கைகளில் தான் இருந்தன. ஜூலை 19, 1969இல் 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதுவரையில் தனியாரிடம் இருந்த வங்கிகள் என்பது ஒரு சிலநபர்களுக்கான வங்கிச்சேவை என்பதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத கொள்கைகளையும் கொண்டிருந்தன. 550-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலான கசப்பான வரலாறும் கண்டோம். திவாலான வங்கிகளில் இருந்தமக்களின் சேமிப்புப் பணமும் காணாமல் போயின. 40 சதவீதத்திற்கு மேலாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தங்களது பங்கை செலுத்திவந்த விவசாயத்துறைக்கு அன்றைய தனியார் வங்கிகள் வெறும் 2 சதவிகித கடன்மட்டுமே வழங்கின என்பது வேதனையான முன்னுதாரணம். வங்கிகள் திவாலாவதை தடுப்பதற்கும், சாதாரணமக்களின் சேமிப்பினை பாதுகாப்பதற்கும், கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகள் துவக்குவதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் பெரிதும் உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கங்களோடு நாட்டுடைமை ஆக்கப்பட்டன. வங்கிகள் தேசியமயத்தை பாஜகவின் முந்தைய வடிவமான ஜன சங்கம் எதிர்த்தது என்பது வரலாறு.
தன்னிறைவை நோக்கி
வங்கிகள் தேசியமயம் என்பது நாட்டிலே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் துவங்கப்பட்டன. சேமிப்பும் கடனும் அதிக அளவில் வளர்ந்தன. விவசாயத்திற்கான கடன், கல்விக் கடன், பெண்கள் சுய உதவிக் குழுக் கடன்,சிறு - குறு கடன் என்பன முன்னுரிமைக் கடன்களாக பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டன. இவையாவும் நமது நாடு விவசாயத்தில் இன்ன பிற தொழில்களில் தன்னிறைவு பெறுவதற்கு பெருமளவு உதவின. வெளிநாட்டு வர்த்தகமும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கான கடன்களும் ஒருசேர பெருமளவு வளர்ந்தன.
நடுவண் அரசின் பல திட்டங்களை நிறைவேற்றுவதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மகத்தானது. சுமார் 42 கோடி ஜன்தன் கணக்குகளில் சுமார் 41 கோடி கணக்குகளை துவங்கியது பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள் மட்டுமே. 30 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஏராளமான தனியார் வங்கிகளை அனுமதித்த பிறகும் பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகப் பங்கு என்பது80 சதவிகிதத்திற்கு மேலாக உள்ளது. 2009-10இல் 86,000 கோடி ரூபாயாக இருந்த மொத்த லாபம் என்பது2019-20இல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது மக்கள் பொதுத்துறை வங்கிகளின் மீது வைத்திருக்கக்கூடிய அபார நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
கடும் சட்டங்களை இயற்ற மறுக்கும் பாஜக
பொதுவாக இன்று வங்கித் துறையை பீடித்து இருக்கக்கூடிய விஷயம் என்பது வராக்கடன். 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பி கட்டாதவர்களின் வராக்கடன் என்பது வங்கிகளின் லாபத்தை மிகவும் பாதிக்கக்கூடிய ஒன்று. பெரும் கடனாளிகளால் உருவாகும் வராக்கடன் 90சதவிகிதம் என்றால், சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் கடனால் உருவாகும் வராக்கடன் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவே. இன்றைய பாஜக அரசும் பெரிய தொழில் நிறுவனங்களின் வராக்கடன்களை முழுமையாக திரும்பிப் பெறுவதற்கான கடுமையான சட்டங்களை இயற்ற மறுக்கின்றன. பெயரளவில் இருக்கக்கூடிய தீர்ப்பாயங்களின் மூலம் வங்கிகளுக்கு வரவேண்டிய வராக்கடனில் வெறும் 40 சதவீதத்திற்கு குறைவாகவே கிடைக்கப் பெறுகின்றன. 2020 மார்ச் மாத விபரத்தின்படி வராக்கடன் என்பது 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அரசின் கடுமையான சட்ட அமலாக்கமே வங்கிகளின் வராக்கடனை திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி. இருப்பினும் இன்றைய பாஜக அரசு அதே பெரிய தொழில் நிறுவனங்களிடம் பொதுத்துறை வங்கிகளை மடை மாற்றம் செய்வதற்கான திட்டத்தில் உள்ளது.
திவாலும் சேமிப்பு சூறையாடலும்
1991 முதலே பல தனியார் வங்கிகளும் புதிய தனியார் வங்கிகளும் சிறிய வங்கிகளும் துவங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1990களில் துவக்கப்பட்ட 10 தனியார் வங்கிகளில் 4 வங்கிகள் திவாலாகி விட்டன. இவ்வாறு துவங்கப்பட்ட பல தனியார் வங்கிகளில் உயர்மட்ட ஊழல் தலைவிரித்தாடுவதையும் நாம் கண்டோம். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிலும் ஊழலும் அதனால் மக்களின் சேமிப்பு சூறையாடப்பட்டதையும் நாம் அனைவரும் கண்டோம்.
பொதுத்துறை வங்கிகளை காப்பது என்பது மக்கள்தங்கள் சேமிப்பை காப்பதாகும், விவசாயிகள் தங்களுக்கான கடனுதவியை பெறுவதாகும், மாணவர்கள் தங்களுக்கான கல்விக்கடனை பெறுவதாகும், பெண்கள் தங்களின் வாழ்நிலை உயர்வதற்கான கடனை பெறுவதாகும், சிறு - குறு நிறுவனங்கள் தங்களின் தேவைகளுக்கான கடனைப் பெறுவதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாடு தன்னிறைவை அடையப் பெறுவதாகும். சமூக நீதி நாட்டிலே மலர பொதுத்துறை வங்கிகளின் தேவை என்பது இன்றியமையாதது.
பொதுத்துறை வங்கிகளை காக்க 10 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் 2021 மார்ச் 15, 16 ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். எனவே பொதுமக்கள் குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கி ஊழியர்களின் அதிகாரிகளின் இத்தகைய தேசபக்திமிக்க போராட்டத்தில் தங்களைஇணைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நம் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும்.
கட்டுரையாளர் : என்.ராஜகோபால், பொதுச் செயலாளர். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு