districts

சைல்ட் லைன் அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை போக்கப்படுமா?

செங்கல்பட்டு, அக். 15- செங்கல்பட்டு மாவட்ட சைல்ட் லைன் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக் குறையாக இருப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உலகளவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தை வன்முறைகள் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்க ளது பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏராளமான அமைப்புகளும் நிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில், வட்டார அளவில், கிராமிய அளவில்கூட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் சைல்ட்லைன் 1098 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 100க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்களில் இந்த  சேவை வழங்கப்பட்டு வருகிறது. பாலியல்  வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந் திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் குழந்தை கள் என பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி  24 மணி நேரமும் 1098 என்ற எண்ணை அழைத்து உதவி கோரலாம். பாதிக்கப்படும் குழந்தைகளே கூட நேரடியாக இந்த எண்ணை அழைத்துப் பேசுவார்கள். பயிற்சி பெற்ற குழந்தை நேயப் பணி யாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால் காவல்துறைக்கு பிரச்சனை கொண்டு செல்லப்படும். உதவிகள் தேவைப்பட்டால் அது தொடர்பான அரசு துறைகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடி யாக தீர்வு பெற்றுத் தருவார்கள். குழந்தை களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட சைல்ட் லைன் அலுவகத்தில் போதிய பணி யாளர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட மாவட்ட சைல்ட் அலுவலகத்தில் 12 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே பணி யாற்றுவதாக கூறப்படுகிறது. பணியாளர் கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்படுவதாக மாவட்ட குழந்தை நல  குழுமத்தின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மீட்கப்பட்ட குழந்தை களை பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து  செல்வதிலும் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;