districts

img

காந்தி வருகைதந்த ரயில் நிலையத்தை மூடுவதா?

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ள 31.1.1946  அன்று  சென்னைக்கு வந்தார் மகாத்மா காந்தி. அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு 1.2.1946 அன்று சிறப்பு ரயில் மூலம் மதுரைக்கு சென்றார். 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அந்த ரயில் காலையில் அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றது. (இன்றைய செங்கல்பட்டு மாவட்டம் அன்றைய சைதாப்பேட்டை நிர்வாக மாவட்டம்). அந்தநேரத்தில், மகாத்மா காந்தியை வரவேற்க விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் என பலரும் ரயில் நிலையத்தை சூழ்ந்தனர்.

அச்சிறுபாக்கம் ரயிலில் இறங்கிய காந்தியை, விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் வரவேற்றனர். பிறகு ரயில் நிலையத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட  காந்திய, அங்கு கூடிநின்ற மக்களுக்கு மத்தியில் கையசைத்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மேடையில் தனது பயணம் குறித்தும் தனக்கு தமிழகத்தை அதிகம் பிடிக்கும் எனவும் கூறி உற்சாகமாக உரையாற்றினார் என ஆ.கோ பண்ணா எழுதிய ‘காமராஜர்  ஒரு சகாப்தம்’ என்ற நூலில் தமிழ் நாட்டில் காந்தி என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார்.

மகாத்மா காந்தி, அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் உரையாற்றியதன் நினைவாக அச்சிறு பாக்கம் ரயில் நிலையத்தில் நினைவு  சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கையை அப்பகுதி மக்கள் அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

ஆனால், தற்போதைய நிலை வேறு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் ரயில்கள் நிறுத்தப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்பட்டுவரும் நிலையில், அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க  தென்னக ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. அச்சரப்பாக்கத்தில் உள்ள ரயில் நிலையத்தில் முதலில் பயணச்சீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் நிலையம் மூடப்பட்டது. அச்சரப்பாக்கம் தற்போது பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருராட்சியை சுற்றிலும் விவசாயம் சார்ந்த 56 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் விவசாயப்  பொருட்களை இந்த ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருப்பதி, பாண்டிச்சேரி, வேலூர் கண்டோன்மெண்ட், விழுப்புரம், தாம்பரம் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி கல்லூரி, மருத்துவப் பணிக்கு தினசரி சென்று வந்தனர். ஆனால், கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி முதலில் பயணச்சீட்டு வழங்குவதை நிறுத்திய நிர்வாகம் பின்னர், இரு மார்க்கத்திலும் நின்று சென்ற ரயில்கள் நிற்கவிடாமல் செய்தது. தற்போது அதையே காரணம் காட்டி அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றிலும் மூடுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

ஊர் மத்தியில் இருக்கும் மரத்தை வெட்ட வேண்டுமானால் முதலில் நிழல் தரும் கிளைகளை வெட்டி விட்டு பின்னர், மரத்தையே வெட்டுவது போல் பயணச்சீட்டு கொடுப்பது முதலில் நிறுத்திவிட்டு, பிறகு ரயில்கள் நின்று செல்வதையும் ரத்து செய்து விட்டனர்.  தினந்தோறும் ரயில்பயணம் செய்துவந்தவர்கள் தற்போது கட்டாயமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அச்சரப்பாக்கம் பகுதியைச் சார்ந்த ஷாஜகானிடம் கேட்டபோது,

“அச்சரப்பாக்கம் வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையம். இங்கு நின்று சென்ற ரயில்கள் தற்போது நிற்பதில்லை.  அரசு உடனடியாக தலையிட்டு அச்சரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லவும், பயணச்சீட்டு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், “ கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கம், கழுங்குழி, படாளம், திருமணி உள்ளிட்ட ரயில்  நிலையங்கள் மூடுவதற்கான பணி களை நிர்வாகம் செய்து வருகிறது” என்றார். கிராமங்கள் நிறைந்த மாவட்டமான செங்கல்பட்டில் ஏழை, எளிய மக்கள் தினசரி பணிக்காக  பயன்படுத்தும் ரயில் நிலையங்களை மூடுவதை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். சென்னையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களை அச்சரப்பாக்கம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். பாண்டிச்சேரி விரைவு ரயிலை இரு மார்க்கத்திலும் நின்று  செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சரப்பாக்கம் மலை மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக காரைக்கால்-வேளாங் கண்ணி விரைவு வண்டி அச்சிறுப் பாக்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் நிலையத்தில் நடை மேடை  அமைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மகாத்மா காந்தியின் நினைவாக ரயில் நிலையத்தை சீரமைத்து நினைவு சின்னங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

;