வேலூர், ஜன. 23- பொங்கலையொட்டி, வெளியூர்களில் வசிக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு ரயில், பேருந்துகளில் சென்றனர். அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டதால், பெரும்பாலானோர் பேருந்துகளில் பயனம் செய்தனர். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், பேருந்துகள் மீது நடவடிக்கை எடுகவும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் வேலூர் சரக இணை போக்குவரத்து காவல் துறையினர் கிருஷ்ணகிரி, வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சுழற்சி முறையில் 7 நாட்கள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா?, அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்களா?, ஓட்டுநர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் சாலை வரி, பிறமாநில ஆம்னி பேருந்துகள் நுழைவு வரியை முறையாக செலுத்தி உள்ளார்களா என்றும் சோதனை செய்தனர். முதற்கட்டமாக 877 ஆம்னி பேருந்துகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 124 பேருந்துகள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சாலை வரி ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 140 வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.