districts

img

மாணவியிடம் பாலியல் வன்முறை: பேராசிரியரை காப்பாற்ற முயன்ற கல்லூரி முதல்வரை கைது செய்திடுக:மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பேராசிரியரை காப்பாற்ற முயன்ற கல்லூரி முதல்வரை கைது செய்திட வேண்டும் என வலியுறுத்தி மாதர், மாணவர், மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசியில்  அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி உள்ளது. இங்கு பணிபுரிந்த பேராசிரியர் டென்சிங்பாலையா என்பவர், அங்கு பயின்ற மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கல்லூரியின் முதல்வர் இப்பிரச்சனையை மூடி மறைக்க முயன்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே, அக்கல்லூரியின்  முதல்வரை கைது செய்திட வேண்டும்.

கல்லுரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வி தலைமையேற்றார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கே.சமயன்,   மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி,   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மேலும் இதில், மாதர் சங்க மாவட்ட தலைவர் என்.உமா மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் எஸ்.தெய்வானை,  வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கே.கருப்பசாமி, பொருளாளர் பி.கணேசன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரன், சிஐடிய மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியன்,  உள்பட பலர் பங்கேற்றனர்.

விடுமுறை விட்ட கல்லூரி நிர்வாகம் :  போராட்டம் நடைபெறும் எனத் தெரிந்தவுடன்  கல்லூரி நிர்வாகமானது,   2 மற்றும் 3ம் ஆண்டு படிக்கும்    மாணவ மாணவிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவித்ததோடு,    கல்லூரி வாசலில் வந்து மாணவர்களை கல்லூரி பேருந்துகளில் ஏற்றி விட்டனர். 

;