கும்பகோணம், நவ.25- கும்பகோணத்திலிருந்து நேரடியாக கேரளா மாநி லத்திற்கு செல்லவும் சபரி மலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கும்பகோணம் வழியாக தாம்பரம் எர்ணா குளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள் ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியான மெயின் லைன் பாதை வழியாக சபரிமலை செல்ல வசதியாக கேரளா மாநிலம் கொல்லம் வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து கொல்லம், புனலூர், தஞ்சை கும்பகோணம் வழியாக கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து தாம்பரத்திற்கு நவம்பர் 28-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு முறையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் வண்டி எண் 06068 சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம், புனலூர், மதுரை நள்ளிரவு 1.05 தஞ்சாவூர் செவ்வாய்க்கிழமை காலை 4:40 கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06067 சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்தில் மாலை 3:40 க்கு புறப்பட்டு மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மதுரை, புனலூர், கொல்லம் வழியாக எர்ணாகுளத்திற்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும் இதனால், இப்பகுதியில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் சிறப்பு ரயிலில் புனலூர் வரை சென்று அங்கிருந்து பம்பை செல்லலாம். இந்த சிறப்பு ரயில் கும்பகோணம், தஞ்சை ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.