districts

மதுரை முக்கிய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்  நலத் திட்ட உதவிகளை  ஆட்சியர் வழங்கினார்     

தென்காசி, செப் .26 தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் மூலம் பயனடையும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்;   ப.ஆகாஷ்  தலைமையில்; மாவட்ட ஆட்சியரக   கூட்டரங்கில்  திங்களன்று  நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் 113 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் வாயிலாக இயற்கை மரணம் அடைந்த மாற்றுத் திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு  நிதியுதவி 28- நபர்களுக்கு தலா ரூ   17,000- வீதம் மொத்தம் ரூ 4, 76,  000- வழங்கப்பட்டது. மற்றும்  முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு ரூ 85 ,  000-மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என மொத்தம் 5 இலட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்    ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில்  ஒருவர் கைது

தென்காசி, செப். 26 தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் அடிதடியில் ஈடுபட்டு வந்த பழனிசாமி(30) என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  அறிவுறுத்தினார்.  அதன் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவின் பேரில்   பழனிசாமியை   குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

சோதனைச் சாவடியில்  வாகனத் தணிக்கை 

தென்காசி, செப். 26 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின்  பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில்  தமிழக கேரள எல்லையான புளியரை காவல் சோதனைச் சாவடியில் புளியரை காவல் துறையினருடன் இணைந்து நக்சலைட்  தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினர். 

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி, செப்.26- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா திங்களன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவை முன்னிட்டு  காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலில் குவிந்துள்ளனர்.  விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ஆம் திருநாளான வருகிற 5-ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வடமாநில வாலிபர் மர்ம மரணம்

தூத்துக்குடி, செப். 26 தூத்துக்குடியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் (25) என்பவர் உட்பட வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து வேலை  பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கட்டிடப்பணிகள் நடந்துவரும் இடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கமலேஷ் ஞாயிறு மாலை இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகஊழியர்கள் வடபாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையி னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்.29இல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி, செப்.26- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வருகிற 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  29.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்”  நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு:  பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தூத்துக்குடி, செப்.26- தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மேற்கொள்ளும் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தூத்துக்குடி மாவட் டத்தில் கடந்த 01.08.2022 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்திட்டத்தின்படி இணையவழிமுறையில் (Online) வாக்கா ளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலு டன் படிவம்-6Bஐ https://www.nvsp.in மற்றும் https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாக வும், Voters Helpline App என்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பணியில் 25.09.2022 முடிய தூத்துக்குடி மாவட்டத்தில் 48.32 சதவிகி தம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மேலும் நகரப் பகுதிகளில் இப்பணி மிக குறைவாகவே உள்ளதால் வாக்காளர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் எதிர்வரும் நாட்களில் சிறப்பு முகாம் நடத்தி வாக்காளர்களிடம் ஆதார் எண்கள் பெற்றிட உத்தேசிக் கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் அவர்களது பாகத்திற்குரிய அனைத்து வாக்காளர்களிடம் 100 சதவிகிதம் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் பெற்றுத்தந்த 40 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியினை பாராட்டி அவர்களை கௌரவித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நற்சான்றிதழ் வழங்கினார். இன்றைய தினம் நற்சான்றிதழ் பெற்ற  அலுவலர்கள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலை அலு வலர்களும் இப்பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி விரைவில் அனைத்து வாக்காளர்களிடமும் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைத்திடவும், மேற்கண்ட பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண் விவரங்களை அளித்து வாக்காளர் பட்டியலில் இணைத்திட தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பராமரிப்பு உதவித்தொகை வழங்காத மகன் மீது நடவடிக்கை  ஆட்சியரிடம் மூதாட்டி கோரிக்கை

தூத்துக்குடி, செப்.26- மகனிடம் இருந்து பராமரிப்பு உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி கோரிக்கை மனு அளித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கமலா என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது மகன் பார்த்திபனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரிய மனு தொடர்பான விசாரணையில் எனக்கு மாதம் ரூ.5ஆயிரம் பராமரிப்பு உதவித் தொகையாக வழங்க வேண்டும் என கோட்டாட்சியரால் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எனது மகன் செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எனது மகனிடம் இருந்து எனது உயிருக்கு ஆபத்து நேராமல் இருக்கவும், மாதம் தோறும் எனக்கு உரிய பராமரிப்பு உதவித்தொகை பெற்றுத் தரவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு :ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி, செப்.26- பாரத ஸ்டேட் வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் (Customer Support & Sales) காலிபணியிடத்திற்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்திலுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு 35 மற்றும் போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கையில் காயமுற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுகள் மற்றும் படைப்பணியின் போது 50 சதவீத காயமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு 15 காலிப்பணியிடங்களும் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் https://bank.sbi./careers அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் 27.09.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி, செப்.26- காயல்பட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி கோமதி (40) இவர்கள் கடந்த 8ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டனர்.  ஞாயிறன்று அவர்கள் வீடு திரும்பியபோது அவர்களது வீட்டின் கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 கிராம் தங்க நகை, வெள்ளி டம்ளர், ரூ.4ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை தனியார்  பள்ளியில் 10 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எழுத அனுமதி மறுப்பு

திருநெல்வேலி ,செப். 26- நெல்லை  புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,000 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை காலை சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது. இதனை அறிந்த அவர்களது பெற்றோர் அங்கு சென்று கேட்ட போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியில் உள்ள டைல்ஸ் தரையை உடைத்ததாகவும், அதற்காக ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு 100 ரூபாய் அபராத தொகையை கட்டி உள்ளனர். சிலர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அதன் பின்னரே மாணவர்களை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதித்தது.

இரட்டை இரயில் பாதை பணி ஆய்வு

திருநெல்வேலி, செப். 26- திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து மேலப்பாளையம் வரை மின் மயமாக்கலுடன் புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 4 கட்டமாக நடந்து வருகிறது.     இதில் முதல் கட்டமாக ஆரல்வாய்மொழியில் இருந்து வள்ளியூர் வரையிலான பணிகள் நிறைவடைந்து ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்டமாக வள்ளி யூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரெயில் பாதைப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயக்குமார் ராய் திங்கட்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து  மாலையில்  வள்ளியூர் முதல் நாங்குநேரி வரையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஆண் ஊழியர் சாலை வசதியில்லாத மலைக்கிராமத்தின் அவலம்

நாகர்கோவில், செப்.26- கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் 108 ஆம்புலன்ஸில் ஆண்குழந்தை பெற்றெடுத்தாள். கன்னியாகுமரி மாவட்டம்  கோதையாறு வன காட்டுப் பகுதியில் உள்ளது கொலஞ்சிமடம். இங்கி ருந்து முதல் குழந்தை, பிரசவ வலி என இரவு 9.54 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் உதவி கோரி அழைப்பு வந்தது. உடனடியாக பேச்சிப்பாறையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்தது. யானைகள் நடமாடும் அடர்ந்த  காட்டுப்பகுதியில் அபிஷா  (19) என்ற பிரசவ பெண்மணியை அழைத்து வரும் வழியில்  பிரசவ வலி அதிகமானது. ஓட்டுநர் எஸ். அஜீஸ் ஆம்பு லன்சை சாலையில் நிறுத்தினார். அவசரகால மருத்துவ நுட்புநர் எச்.சுஜின் ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். அந்தப் பெண்மணிக்கு அழ கான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை க்கு பிறகு  தாயையும், சேயையும் பாதுகாப்பாக பேச்சிப் பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில் இருவரும் நல முடன் உள்ளனர். இப்பகுதியில் கடந்த ஓராண்டில் நடந்துள்ள இரண்டாவது ஆம்புலன்ஸ் பிரசவம் இது. பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

;