தோழர் எம்.பெத்தையா நினைவு தினம் அனுஷ்டிப்பு
விருதுநகர், டிச.31- விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களின் ஒருவர் தோழர் எம்.பெத்தையா. அவரது 8வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் பாத்திமாநகரில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு கிளைச் செயலாளர் பி.ராஜா தலைமையேற்றார். துவக்கி வைத்து நகர் செயலாளர் எல்.முருகன் பேசினார். மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் விளக்கிப் பேசி னார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜெயபாரத், நகர்க்குழு உறுப்பினர் ஐ.ஜெயா, பி.ஸ்டாலின் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலசலிங்கம் பல்கலை, இ.சி.இ. துறைக்கு என்.பி.ஏ. அங்கீகாரம்
திருவில்லிபுத்தூர், டிச.31- தேசிய அங்கீகார வாரியம் (என்.பி.ஏ) அடுக்கு-1,வாஷிங்டன், அக்கார்டு அமைப்பின் கீழ் இரண்டாவது முறையாக,மறு அங்கீகார ஆய்விற்கு, உயர்கல்வி நிறு வனங்களின் மூத்த பேராசிரியர் குழு கடந்த மாதம் பல்கலைக்கு வருகை தந்து மூன்று நாள் நடத்திய ஆய்வுகள் அடிப்படையில் கலசலிஙகம் பல்கலைக்கழக எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ் துறைக்கு மிக உயர்ந்த ஆறு ஆண்டுகள் அங்கீகார அந்தஸ்தையும் பயோ டெக்னாலஜி , கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் துறைக்கு மூன்று ஆண்டு அங்கீகார அந்தஸ்தையும் வழங்கி பாராட்டியுள்ளது. இதனால், கலசலிங்கம் பல்கலை.யில் பயிலும் மாணவர்களுக்கு, சர்வதேச அளவில், உயர்படிப்பும், வேலை வாய்ப்பும் எளிதாக கிடைக்கும். பல்கலைக்கழக வேந்தர், கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர்.எஸ்.அறிவழகி , துணை தலைவர்கள் எஸ்.சசிஆனந்த் ,எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், பதிவாளர்வி.வாசுதேவன் ஆகியோர்,தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று சாதனை புரிந்த பேராசிரியர்கள்,துறை தலைவர்கள், இயக்குநர்கள்,டீன்கள், மற்றும் பணியாளர்ள்,அலுவலகர்கள்,டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளைப் பாராட்டினர்.
25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் -2 பேர் கைது
திருவில்லிபுத்தூர், டிச.31- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள், அழகேந்திரன் ஆகிய இருவரும் ஒரு ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்தனர். தகவல் அறிந்த திருவில்லிபுத்தூர் போலீசார் விரைந்து சென்று இருவரையும் பிடித்து கைது செய்தனர். ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை கைப்பற்றி ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மல்லிகைப் பூ கிலோ ரூ.3 ஆயிரம்
திருநெல்வேலி டிச 31- திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. ஆனாலும் காலை நேரங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுகளில் இரண்டு பூக்களின் விலை யும் அதிகரித்தது. வெள்ளிக்கிழமை ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500 வரை விற்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை ஆனது. பிச்சி பூ ஒரு கிலோ ரூ.1,250 வரை வெள்ளிக்கிழமை விற்கப் பட்டது. சனிக்கிழமை அதன் விலை ரூ.2,000- ஆக இருந்தது.
யானையால் சேதமான பயிர்கள்
திருநெல்வேலி டிச 31- திருநெல்வேலி மாவட்டம் விக்கரமசிங்கபுரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை பயிரிட்டு வருகின்றனர். டானா பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் மாவடி விளை பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் நெல் பயி ரிட்டுள்ளார். அவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை நெற்பயிர் வழியாக நடந்து சென்று அங்குள்ள பனை மரத்தை பிடுங்க முயற்சி செய்துள்ளது. இதில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. டேனிசேவியர் (23) என்பவரின் தோட்டத்தில் புகுந்த மிளாக்கள் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை சேதப்படுத்தி உள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து கீழே இறங்குவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு திறப்பு
தூத்துக்குடி, டிச.31- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு, தருவைக்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்கள், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்புகளை ஆகிய புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் புதிய கட்டடங்களில் குத்து விளக்கேற்றினர்.