கோவி.பால.முருகு
தேவாரம் திருவாசகம்
தித்தித் திருக்கும்-ஆண்டாள்
பாவாரம் திருப்பாவை பைந்தமிழ்ச் சுவைக்கும்!
நாவோரம் பெரிய புராணம் இனிக்கும்-தமிழ்
பாவூரும் திருப்புகழ் சந்தம் படிக்கும்!
வள்ளலார் திருவருட்பா
வாழ்வைக் கொடுக்கும் -தத்துவம்
அள்ளக் குறையாமல் திருமந்திரம் வடிக்கும்!
கம்பன் பாவெல்லாம்
கவிநயம் பிறக்கும்-தமிழ்க்
கொம்பன் விருத்தத்தில் ஆற்றல் சிறக்கும்!
புகழேந்தி நளவெண்பா புகழில் ஒலிக்கும்-தமிழ்
புகழ்ந்திடும் வெண்பாவின் புலமை களிக்கும்!
சிலம்பில் இளங்கோவின்
சிந்தனைச் சிறக்கும்-தமிழ்
உலவிடும் முத்தமிழ்ச் சுவையில் மணக்கும்!
சீத்தலைச் சாத்தனார் மேகலை ஒலிக்கும்-தமிழ்
காத்தலில் அணியென பாவியம் துளிர்க்கும்!
ஆழ்வார்கள் அருளிய
பிரபந்தம் குவிக்கும்-தமிழில்
ஆழ்வார் அதனைப் படிக்கப் பிடிக்கும்!
சித்தர்கள் பாடலில் சிந்தனைச் சுரக்கும்-அதை
புத்தியில் உறைந்திட தத்துவம் பிறக்கும்!
பக்தி இலக்கியங்கள் தமிழை வளர்க்கும்-அதன்
சக்தி தெரியாமல் வடமொழி தடுக்கும்!
எத்திக்கும் தமிழோசை செவியில் மணக்க-இங்கு
செத்த வடமொழியை சேர்க்காது தவிர்க்க!
அர்ச்சனைத் தமிழே கடவுளுக்கும் பிடிக்கும்-அதன்
சொற்களே என்றைக்கும் பக்தியைக் கொடுக்கும்!