districts

வளர்ச்சித் திட்ட பணிகள் நிலவரம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பெரம்பலூரில் ஆய்வு

பெரம்பலூர், மே 18 - தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் முகவரியின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் இயந்திரப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல்துறை, சுகாதாரத் துறை, நகராட்சி, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கல்வித் துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் குறித்த நடவடிக்கைகள் துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள விதைகள் மற்றும் உரங்களின் நிலவரம், இருப்பு நிலை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடுபொருட்கள், இயந்திர தளவாடங்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவு, எய்திய அளவு, நிலுவைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் கடனுதவி வழங்கப்பட்ட விபரங்கள், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நபார்டு வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் செயல்பாடுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் அனில்மேஷ் ராம் விரிவாக ஆய்வு செய்தார். பின்னர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் வட்டம் விளாமுத்தூர் முதல் நெடுவாசல் கிராமம் வரை மருதையாற்றினை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பெரம்பலூர் சாய்பாபா கோவில் அருகிலுள்ள தீரன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

;