districts

கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு இல்லை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, ஆக.30 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு இல்லை. உடனடியாக இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.  இதில் விவசாயிகள் கூறியதாவது: “மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா இருப்பு இல்லை. போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூட்டைக்கு ரூ.70 வீதம் விவசாயிகளிடம் கமிசன் வாங்குவதைத் தடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல மாதங்களாக நெல் எடை போடப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் பயிர் காப்பீடு தாமதமில்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கறம்பக்குடி வேளாண் விரிவாக்க மையத்தில்  வாங்கப்பட்ட 4 மூட்டை விதை நெல்லும் தரமற்றது. முளைப்புதிறன் இல்லை. தரமான விதை நெல் வழங்கப்படுவதோடு, தரமற்ற விதைகளை வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மதுபாட்டில்களால் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கச் செய்கிறது. எனவே, காலி மதுபாட்டில்களை அரசே சேகரிக்க வேண்டும். கால்நடை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருவரங்குளம் அருகே திருவுடையார்பட்டியில் தெற்கு வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். தெற்கு வெள்ளாற்றின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை விதைத்து மண் அரிப்பையும், ஆக்கிரமிப்பையும் தடுக்க வேண்டும். காவிரி தண்ணீர் செல்லும் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். குளத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து அத்திரிவயலுக்கு மின்பாதை அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும்”. இவ்வாறு அவர்கள் கூறினர்.

;