districts

img

நீலகிரி மலை ரயில் டிச.21 ஆம் தேதி வரை ரத்து

நீலகிரி மலை ரயில் டிச.21 ஆம் தேதி வரை ரத்து

நீலகிரி, டிச.15-

மேட்டுப்பாளைம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்து வரும் டிச.21 ஆம் தேதியன்று வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலில் செல்ல உள்ளூர் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் பாதையில் ஆடர்லி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து அக்.23 ஆம் தேதியன்று பாறைகள் விழுந்ததால் மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.

மேலும், தொடர் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் மலை ரயில் இயக்கம் ரத்து செய்வதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது நிலச்சரிவு, பாறைகள் விழுவது அதிகரித்துள்ளது. மீண்டும் கல்லார் அருகே பாறைகள் விழுந்ததால் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டது. பாறைகளை அகற்றி தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் டிச.14 ஆம் தேதியன்று வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

மேலும், மழை நீடித்து பாதிப்புகள் ஏற்படும் என்பதால் வரும் டிச.21 ஆம் தேதியன்று வரை மலை ரயில் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால், குன்னூர் – உதகை இடையே மலை ரயில் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

;