districts

img

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை, ஜன.7 - தரங்கம்பாடியில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து 11 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 480 மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் 480 மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டியினை கல்லூரியின் செயலர் அருட்சகோதரி கருணா ஜோசப் பாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.    தரங்கம்பாடி, கேசவன்பாளையம், எருக்கட்டாஞ்சேரி, ஒழுகைமங்கலம், ஒழுகை மேட்டுப்பாளையம், பொறையார், ராஜூவ்புரம், தரங்கம்பாடி, உப்பனாறு பாலம் வழியாக 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி போட்டி துவங்கிய கல்லூரிக்கே வந்தனர். மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை பெண்கள் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலியும், இரண்டாமிடத்தை அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவி ரஞ்சனியும், மூன்றாம் இடத்தை நாகை ஏடிஎம் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி காளீஸ்வரியும் பிடித்தனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 4 முதல் 20 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.500 ஆறுதல் பரிசும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.  வட்டாட்சியர் ஹரிதரன், சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான ஏ.கே.சந்துரு, உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் விழாவில் பரிசளித்து வாழ்த்தி பேசினர். பெண்களிடையே கொரோனா தடுப்பூசியின் அவசியம், முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற மாரத்தான் போட்டியை முதல்வர் காமராஜன், கணிதத்துறை பேராசிரியர்கள் டி.விஜயபாலன், முனைவர் ஆனந்த் ஞானசெல்வம், பேராசிரியர்கள் இருதயராஜ், கிரேஸி பேபி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.