districts

img

விபத்தில் சிக்கிய மாணவருக்கு சாலையிலேயே அவசர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர்  

மன்னார்குடியில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த மாணவருக்கு அந்த வழியாக சென்ற செவிலியர் ஒருவர் அவசர சிகிச்சை அளித்து மாணவனின் உயிரை காப்பாற்றினார்.  

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டத்தைச் சேர்ந்த வனஜா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இவர் தனது குடும்பத்துடன் காரில் மதுக்கூர் சாலையில் உள்ள லெக்கணாம்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர், ஆடுகளின் மீது மோதி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த செவிலியர் வனஜா உடனே காரை நிறுத்தி அந்த இளைஞரைப் பரிசோதனை செய்துள்ளார்.  

அப்போது அந்த மாணவன் ஆபத்தான நிலையிலிருந்ததை உணர்ந்த வனஜா உடனே அவருக்கு சி.பி.ஆர் என சொல்லப்படும் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கச் செய்யும் முதலுதவி சிகிச்சை அவருக்கு அளித்தார். அதனை தொடர்ந்து மயக்கத்தில் இருந்த அந்த மாணவன் சுயநினைவுக்கு திரும்பிய பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கிய மாணவருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செவிலியரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றன. 

;