districts

குடவாசல் காவல் நிலையத்தை கண்டித்து போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

குடவாசல், ஜூலை 12 -  திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. செயலற்று முடங்கிக் கிடக்கும் காவல் நிலையத்தின் அலட்சியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் - கொரடாச்சேரி ஒன்றியம் சார்பாக காவல் நிலைய முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் திங்கள்கிழமை காலை காவல் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட போது, சம்பவ இடத்திற்கு வந்த  நன்னிலம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, ஒன்றியச் செயலாளர்கள் (குடவாசல்), ஆர்.லெட்சுமி (கொரடாச்சேரி) டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, விவசாயிகள் சங்க செயலாளர்கள் (குடவாசல்), டி.ஜி.சேகர் (கொரடாச்சேரி) கே.செந்தில் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், இன்னும் ஒரு வாரத்தில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் காவல் நிலைய முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

;