districts

img

சிபிஎம் மூத்த தோழர் பூந்தாழங்குடி கோவிந்தராசு காலமானார்

திருவாரூர், ஜூலை 16 -  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் பூந்தாழங்குடியில் வசித்து வந்த கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி தோழர் பூந்தாழங்குடி ஏ.கோவிந்தராசு (92) சனிக்கிழமை காலமானார்.  1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், பிறகு மன்னார்குடி ஒன்றியக் குழு உறுப்பினராக செயல்பட்டவர். 1967 ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலச் சுவான்தார்களுக்கும் இடையே நடைபெற்ற கூலி போராட்டத்தைப் பயன்படுத்தி அன்றைக்கு ஆட்சியிலிருந்த திமுக அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தியாகி.பூந்தாழங்குடி பக்கிரி பலியானார். அவரோடு இணைந்து போராடியதற்காக பூந்தாழங்குடி கோவிந்தராசு உள்ளிட்ட 110 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு அனைவரும் 17 நாட்கள் சிறையிலிருக்க நேர்ந்தது.  பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முன்முயற்சியால் அனைவரும் ஜாமீனில் வெளி வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் என்ற தொகுப்பில் இவரைப் பற்றிய பதிவுகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  மறைவு செய்தி அறிந்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

;