districts

img

நூல் விலை உயர்வை குறைக்கக்கோரி விசைத்தறி மாநில சம்மேளனம் கோரிக்கை  

அவிநாசியில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இதில் நூல் விலை உயர்வை குறைக்க கோரி வலியுறுத்தப்பட்டது.  

அவிநாசி - நூல் விலை உயர்வால் கடந்த இரண்டு மாதங்கள் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் உட்பட உரிமையாளர்கள் சார்பு தொழில்கள், சுமார் 15 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராஜபாளையம், ஆண்டிப்பட்டி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கிலோவுக்கு 50 ரூபாய் உயர்த்தி 10 ரூபாய் குறைப்பதும் எந்த வகையிலும் பலன் அளிக்காது.

நூல் விலை உயர்வை குறைக்க நூற்பாலைகள் தவிர விசைத்தறி, கைத்தறி, ஆயத்த ஆடை, பனியன் ஆகிய பிரிவு தொழிலாளர்கள் உரிமையாளர்கள், ஒன்றுபட்டு பெரும் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும் என்று சிஐடியு சம்மேளனம் அறைகூவல் விடுகிறது. மேலும் தொழிலாளர் சட்ட திருத்தம் கைவிட்டு, பண மயமாக்கல் திட்டம் திரும்பப் பெறவும், மின்சார சட்ட மசோதா, பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலை உயர்வு வாபஸ் வாங்கவும், விசைத்தறி தொழிலுக்கு ஏராளமான நெருக்கடி சூழ்ந்த நிலையில் விசைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதம் உயர்த்தப் போகும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு ஜவுளித் துறையின் மூலம், வழங்கிவந்த காப்பீடு திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் போன்ற மக்கள் கோரிக்கையை முன்வைத்து மோடி அரசை கண்டித்து வருகின்ற பிப்ரவரி 23, 24 ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் வெற்றியடைய செய்வோம்.

திருப்பூர் மாவட்டம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 2014 முதல் ஊதிய உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கூலி உயர்வு உடன்பாடு எட்டப்பட்டது. மேற்கண்ட உயர்வில் தொழிலாளர்களுக்கு எதுவும் வழங்கவில்லை. தொழிலாளர்கள் சங்கங்களுடன் பேசாமல் உடன்பாடு செய்யாதது கண்டனத்துக்குரியது.  

அதனைதொடர்ந்து இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் இப்பிரச்சனையில் மாநில அளவில் ஆதரவு போராட்டம் நடத்துவோம் என்று மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இதில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க மாநில சம்மேளனம் வேண்டுகோள் விடுத்தது. இக்கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபி குமார், பொருளாளர் எம்.அசோகன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

;