districts

img

ஆம்பூர் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் விவசாயிகள் சங்க திருப்பத்தூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருப்பத்தூர், ஜூலை 20 - ஆம்பூர் சர்க்கரை ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 13 ஆவது மாவட்ட மாநாடு மாவட்ட துணைத் தலைவர் ஜி.நரசிம்மன் தலைமையில் திருப்பத்தூரில் செவ்வாயன்று (ஜூலை 19) நடைபெற்றது. முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.லட்சுமண ராஜா சங்க கொடியை ஏற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ஜி. வீரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் கே.முகமது அலி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல் வேலை அறிக்கை யையும், மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகாலிங்கம் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.தயாநிதி, ஜோதி (சிஐடியு), விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வ.அருள் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வரவேற்புக் குழு தலைவர் ஜாபர் சாதிக் வரவேற்றார். எஸ்.காமராஜ் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
ஆம்பூர் சர்க்கரை ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாற்றின் நடுவே ஒரு பாலம் அமைக்க வேண்டும், பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், மாவட்டத்தில் வாசனை திரவம் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு இடு பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டும், ஏலகிரி மலையில் ஏழை விவசாயிகளின் நிலங்களை கைப்பற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ப. சக்தி வேல், செயலாளராக கே.சாமி நாதன், பொருளாளராக சி.எஸ்.மகா லிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;