ஆலந்தூர்,நவ.24- பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் தொடர்ந்து கசிந்து வரும் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னை ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், மூவரசன்பட்டு, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தங்களது பகுதியில் இருந்து தாம்பரத்துக்கு எளிதாக செல்லும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு சுரங்கப்பாதை கட்டப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதையில், தற்போது சிமெண்ட் சாலைகளில் ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. இதையடுத்து, இந்த சுரங்கப்பாதையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் சரிவிலிருந்து மேலேறும் இருசக்கர வாகன ஓட்டிகள், கழிவுநீர் கசிவினால் கான்கிரீட் சாலையில் சறுக்கி விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் பயணித்து வரும் இந்த சுரங்கப்பாதையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.