districts

img

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களின் நிரந்தர புகைப்பட கண்காட்சி திறப்பு

மயிலாடுதுறை, மே 24 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பொது மக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் நிரந்தர புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா திறந்து வைத்து பார்வையிட்டார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் நிரந்தர புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் இந்த புகைப்பட கண்காட்சியினை கண்டுகளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியில் குறிப்பாக தியாகி தில்லையாடி வள்ளியம்மைக்கு, அவரை போற்றும் வகையில் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ.43 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு பயன்படுகிற வகையில் புனரமைக்கப்படவுள்ளது. மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் சமூக சீர்த்திருத்தவாதி, எழுத்தாளர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்க்கு ரூ.1 கோடி மதிப்பில் சிலை அமைக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறையில், கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர் வேதநாயகத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 கோடி செலவில் அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படவுள்ளது” என்றார்.

;