திருவாரூர், பிப்.27 - தமிழ்நாடு முதலமைச்சரால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 ஆவது தளத்தில் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் காணொலி வழியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை பார்வையிட்டனர். திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ராஜேந்திரன், திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், மருத்துவக் கல்லூரி உதவி நிலைய மருத்துவ அலுவலர் அருண்குமார், மனநல மருத்துவத்துறை பேராசிரியர் மரு.சூரியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அரசு மருத்துவமனைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.