districts

திருச்சி முக்கிய செய்திகள்

100 டன் வெல்லம் திருப்பி அனுப்பப்பட்டதா?

சென்னை, ஜன. 16 - தரமற்ற 100 டன் வெல்லத்தை அதிகாரி கள் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களுடன் அடங்கி பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் உள்ள வெல்லம் சில கடைகளில் நன்றாக தரமாக இருந்தது. பெரும்பாலான கடைகளில் ‘பிசுபிசு’ என ஒழுகிய நிலையில் காணப்பட்டது. பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்று புகார் எழுந்த நிலையில் முதலமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து தரமான பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த உத்தரவிட்டார். மேலும், பொங்கல் பரிசுதொகுப்பை இந்த மாதம் இறுதி வரை பெறவும் அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் வெல்லம் ‘பிசுபிசு’ என இருந்தால் அதை கடைக்காரர்கள் பொது மக்களுக்கு வழங்காமல் குடோனுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என அதி காரிகள் உத்தரவிட்டனர். அதற்கு பதில் குடோனில் நல்ல வெல்லத்தை பெற்று மக்க ளுக்கு வழங்கவும் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி தரமான வெல்லம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வந்த தரமற்ற 100 டன் வெல்லத்தை ஒப்பந்ததாரருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளி யாகி உள்ளது. அதற்கு பதில் தரமான வெல்லத்தை பெற்று விநியோகித்து வருவ தாக கூறப்படுகிறது. ஒருசில மாவட்டங்களில் ஆட்சியர்க ளிடம் இருந்து வந்த அறிக்கையின் அடிப்படை யில் தரமற்ற சில பொருட்களை ஒப்பந்த தாரர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டு, தரமான பொருட்களை பெற்று விநியோகிகப்பட்டதாகவும் தெரிகிறது.

பசுவின் வயிற்றில் 60 கிலோ பிளாஸ்டிக் கழிவு

சென்னை, ஜன. 16 - திருவள்ளூரில் உயிரிழந்த பசு மாட்டின் வயிற்றிலிருந்து 60 கிலோ பிளாஸ்டிக் கழிவு எடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்க ளில் பொதுமக்கள் கொட்டுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் கால்நடைகள் மட்டுமின்றி, வன விலங்குகளும் கடுமை யாக பாதிக்கப்படுகின்றன. அண்மையில் கோவை வனச் சரகத்துக்கு உட்பட்ட மருதமலை செல்லும் பாதையில் இருந்த யானையின் சாணத்தில் முகக்கவசம்,  பால் பாக்கெட் நெகிழிப்பை, சானிடரி நாப்கின் உள்ளிட்டவை இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை போரூரைச் சேர்ந்த சாய் விக்னேஷ் என்பவர், சாலைகளில் அடி படும் மற்றும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் விலங்குகளை பராமரிப்பதற்காக, திரு வள்ளூர் மாவட்டம் சென்றாயன் பாளை யத்தில் சரணாலயம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு பராமரிக்கப்பட்ட பசு ஒன்று, அண்மையில் கடும் உடல் உபாதை களால் உயிரிழந்தது. அந்த பசுவை அறுவை சிகிச்சை செய்தபோது அதன் வயிற்றிலிருந்து, பாலித்தீன் பைகள் உள்ளிட்ட 60 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. சாலைகளில் கிடக்கும் குப்பை களை திண்பதால், இதேபோன்று பல மாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக சாய் விக்னேஷ் வேதனை தெரிவித்தார். மாடுகள் வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், குப்பை கிடங்குகளில் மாடுகள் மேயவிடக் கூடாது எனவும் கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய, பசுவின் பால், பிளாஸ்டிக் பொருட்களால் நஞ்சாக மாறும் சூழல் காணப்படுகிறது. இதை உணர்ந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதோடு, அதன் பயன்பாட்டை தவிர்க்கவும் முயல வேண்டும் என கால்நடை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

உணவளிக்கும் மின் ஊழியர்கள்

சென்னை, ஜன. 16 - ஊரடங்கால் பாதிக்கப்படும் சாலையோர மக்களுக்கு மின் ஊழியர்கள் தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. பொதுமுடக்கத்தின் காரணமாக சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.  இந்நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மணலி துணை மின் நிலைய கிளையும், சிஐடியு-வும் இணைந்து, உணவு சமைத்து, தெருவோரம் வசிக்கும் மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர்.இதனால் 200 மேற்பட்டோர் பயன்பெற்றனர். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. வெங்கடய்யா, ஜி.சரத்பாபு, மதன் கோபால், வீரைய்யா இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

திருவள்ளூர், ஜன.16 - வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவள்ளூர் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் அமித்குமார் உள்ளிட்டோர் சனிக்கிழமையன்று (ஜன.15)  திருவள்ளூர் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு வந்த சிலர் அமித்குமார் உள்ளிட்டோரை கத்தியால் தாக்கினர். இதனையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக விஜய், வேலு, மஜித், நிர்மல் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே கேரேஜில் தீ விபத்து

சென்னை, ஜன. 16 - சென்னை பெரம்பூர் ரயில்வே கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பூரில் ரயில்வே கேரேஜில் ரயில்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் சனிக்கிழமையன்று (ஜன.16) சரக்கு ரயில் ஒன்றின் ஆயில் டேங்கை சுத்தம் செய்தனர். அதன்பின் ஆயில் டேங்கில் வெல்டிங் வைக்கும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மாணவரை தாக்கிய காவல்துறை

சென்னை, ஜன. 16 - மாணவரை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர்  தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வியாசர்பாடி புது நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (22). தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் 5ஆம் ஆண்டு படித்துக் கொண்டே, பகுதி நேர வேலை செய்து வருகிறார். அப்துல் ரஹீம் சனிக்கிழமையன்று (ஜன.15) நள்ளிரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கொடுங்கையூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அபராதம் செலுத்த கூறியுள்ளனர். முகக்கவசம் அணிந்திருந்ததால் அபராதம் கட்ட அப்துல் ரஹீம் மறுத்துள்ளார். இதையடுத்து அவரை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, ஆடைகளை களைந்து, முகத்தில் சிறுநீர் கழித்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது சுட்டுரையில், இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர் மீதான வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு, சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வார ஓய்வு:  மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கும் காவலர்கள்!

ராணிப்பேட்டை,ஜன.16- ராணிப்பேட்டை மாவட்டத்தில் வார ஓய்வு எடுப்பதால் காவல்துறையினர் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 காவல் உட் கோட்டங்கள் உள்ளன.  சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள் 18, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 2, போக்குவரத்து காவல் நிலையங்கள் 2, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 2, என மொத்தம் 24 காவல் நிலையங்கள் உள்ளன. ஆயுதப்படையுடன் சேர்ந்து 734 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். காவலர் தங்கள் உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 60 முதல் 80 காவலர்கள் வார ஓய்வு செல்கின்றனர். இதனால் தங்களது உடல் நலனை பேணிக் காக்கவும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் முடிகிறது. இதனால் காவலர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.  இந்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் அறிவியல் மாநாடு: புதுவை மாணவர்கள் தேர்வு

புதுச்சேரி,ஜன.16- இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை வழிகாட்டுதலின்படி ஆண்றுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் 29ஆவது தேசிய அளவிலான குழந்தை கள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்படி, இந்த மாநாட்டில் பங்கேற்க புதுவை மாணவர்களுக்கு ‘நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல்’ என்ற கருப்பொருளில் காணொலி காட்சி மூலம் தேர்வு நடைபெற்றது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 36 பள்ளி மாணவர்கள் 69 ஆய்வுக் கட்டுரைகளை படக்காட்சிகளுடன் சமர்ப்பித்தனர். இதிலிருந்து 19 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதனை தயாரித்த மாணவர்கள் புதுச்சேரி, லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்த மாநில அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தொடக்க விழாவிற்கு பயிற்சி நிறுவன முதல்வர் புனிதா தலைமை தாங்கினார். புதுவை அறிவியல் இயக்க பொதுச்செயலர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். ரவிச்சந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஆய்வு கட்டுரைகளில் இருந்து 6 பள்ளி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த 6 மாணவர்களும், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொள்வார்கள்.


முன்பதிவு செய்தால் மட்டுமே  புறநோயாளிகளுக்கு சிகிச்சை: ஜிப்மர் அறிவிப்பு

புதுச்சேரி, ஜன. 16- முன்பதிவு செய்தால் மட்டுமே புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுவையில் கடந்த 3 வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்கு வருவோருக்கு இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஜிப்மரில் கொரோனா தொற்று அபாயத்தை குறைக்க வருகிற 18ஆம் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள், ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். 19ஆம் தேதி முதல் தினசரி ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் மட்டுமே நேரடி வருகைக்கு அனுமதிக்கப்படுவர். வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஆலொசனைகள் வழங்கப்படும். ஒவ்வொரு துறையும் முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும். சமூகத்திலும், மருத்துவமனையிலும் கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவோருக்கு முன் எச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து நோயாளிகள், உதவியாளர்கள் முகக்கவசம் அணிதல், முன்பதிவு செய்தல், ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர், தொலைபேசி மருத்துவ ஆலொசனைகளை பின்பற்ற வேண்டும். நோயாளிகளும், உதவியாளர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவர். அனைத்து அவசர மருத்துவ, அறுவை சிகிச்சை பிரிவுகளும் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவை அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜன. 16- மின்கட்டண உயர்வை பாரபட்ச மின்றி திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக புதுச்சேரி மாநில மக்கள் கடும் நெருக்கடியை அனுபவித்து வரு கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொ ரோனா நோய்த்தொற்று, பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, மின் கட்டண உயர்வை மீண்டும் பரி சாக வழங்க ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசும் தயாராகி வருகிறது. வீடுகளுக்கான மின் உபயோக கட்ட ணத்தை யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தியிருப்பதும், சிறு,குறு விவ சாயிகளுக்கான நிரந்தர கட்டணத்தை ரூ.11இல் இருந்து ரூ.20 வரையும், இதர  விவசாயிகளுக்கான  நிரந்தர கட்ட ணத்தை ரூ. 50இல் இருந்து ரூ.75 வரையும் உயர்த்தியிருப்பது புதுச்சேரி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான நடவடிக்கையாகும். இந்தியாவிலேயே அதிகளவு 41 விழுக்காடு வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் உள்ள மாநிலமாக புதுச்சேரி உள்ளது என்று அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் 10 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அரசி யல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலை யில் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கொரோனா பெருந்தொற்று நேரத்தில் அவசர அவசரமாக இந்த மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு புதுச்சேரி மாநில அரசுக்கு வெகு வாகக் குறைக்கப்பட்டதும், மாநில அரசுக்கான வரி வருவாயை மத்திய பாஜக அரசு ஜி.எஸ்.டி என்ற பெயரால் நேரடியாக பறித்துக் கொண்டதுமே புதுச்சேரி மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட காரண மாகும். புதுச்சேரி மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்கை யான நிதி நெருக்கடிக்கு, ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். லாபத்தில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் மின் துறையை தனி யாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் கொள்கை முடிவே மின் கட்டண உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.  புதுச்சேரி மக்கள், விவசாயிகள் மீது திணிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் புதுச்சேரி மக்களுக்கு எதி ராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின், புதுச்சேரி அரசின் நட வடிக்கைகளை எதிர்த்தும், மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் போராட அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

;