districts

மகசூல் பாதித்த நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு

திருச்சிராப்பள்ளி, மே 16 - திருச்சி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சங்கிலிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் கிளியூர் பகுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டு சாகுபடி செய்த பிபிடி நெல் ரகம் (ஆந்திரா பொன்னி) அறுவடை நேரத்தில் புகையான் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. இதை நேரில் வேளாண்மை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து தினசரி பத்திரிகையிலும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் அவர் அளித்த மற்றொரு மனுவில், திருவெறும்பூர் வட்டம் கிளியூர் விளைநிலங்களின் வடிகால் நீர் கிளிக்காட்டு வாரியில் வடிந்து, ஆனந்தன் காவேரி மூலம் வெண்ணாற்றில் வடிகிறது. மேற்படி வடிகாலை தூர்வாரி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் மிதமான மழை பெய்தால்கூட சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விடுவதால், விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த ஆண்டு கிளிக்காட்டு வாரியை தூர்வார நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

;