மதுரை, பிப்.27 - தஞ்சாவூரில் வழிபாட்டுத் தலம், கல்லூரிக்கு அருகே இருக்கக் கூடிய அரசு மது பான கடையை உடனே மூட வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சுகு மாறன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர் பகுதி தஞ்சாவூர், பட்டுக் கோட்டை பிரதான சாலை யில், வழிபாட்டு தலங்கள், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, பேருந்து நிறுத்தம், வங்கி ஆகியவற்றுக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை யில் மது வாங்கி அருந்தும், மது பிரியர்கள் போதையில் பெண்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அருவருக்கத் தக்க வார்த்தைகளால் பேசு வதும், சாலையில் ஆங் காங்கே மது போதையில் மயங்கி கிடப்பதாலும் பொது மக்களுக்கும், பெண்களுக் கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு இடை யூறு இல்லாத வேறு பகுதிக்கு, கடையை மாற்ற உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், “மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட மதுபான கடையை மாற்ற உத்தரவிட்ட நிலையில், தற் போது வரை கடை மாற்றப் படாமல் தொடர்ந்து பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறது” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் மதுபான கடையை மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், இது வரை ஏன் மாற்றம் செய்ய வில்லை என கேள்வி எழுப்பி, உடனடியாக கடையை மூட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.