மயிலாடுதுறை, பிப்.13- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து கிடக்கின்றன. இதனால், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எஞ்சிய நெல்லை விற்பனை செய்யமுடியாமல் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, மையங்களிலும், வயல்களிலும் குவித்து வைத்து காத்துக்கிடக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் வாணிப கழகமும் ஒவ்வொரு மையங்களிலிருந்தும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச்செல்ல தேவையான லாரிகளை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட செம்பனார்கோவில், கீழையூர், ஆக்கூர், திருக்கடையூர், நல்லாடை, திருவிளையாட்டம், விசலூர், தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மையங்களில் மலைபோல் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அறுவடை செய்து மையங்களுக்கு எடுத்து வந்த நெற்களை எங்கே வைப்பது என திக்குமுக்காடி நிற்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்த நெற்கள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததால் ஒவ்வொரு நாளும் நெற்களை ஏற்றிவரும் விவசாயிகளிடம் பதில் சொல்ல முடியாமல் நிலையங்களின் பட்டியல் எழுத்தர், உதவியாளர்கள் தவித்து வருகின்றனர். தார்ப்பாய் போட்டு மூடல் மேலும், சாக்குகள், சணல் உள்ளிட்டவை பற்றாக்குறையாலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பல நாட்கள் கொள்முதல் நிலையங்களில் உள்ள களத்தில் அடுக்கி வைத்து தார்பாய் போட்டு மூடி வைக்கப்படுகிறது. தரங்கம்பாடி வட்டத்தில், தை மாத முதல் வாரத்தில் பெய்த பருவம் தவறிய கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி பல ஏக்கரில் நெல் மணிகள் முளைத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்தோடு நோய் தாக்குதல், உரம், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டு அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதிலும் பிரச்சனை இருந்து வருகிறது.
விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை
நெல் கொள்முதல் நிலையம் களத்தில் கொட்டி வைக்கப்படும் நெல் மூட்டைகள் திடீர் மழை, பனியால் பாதித்து ஈரப்பதம் அதிகரிப்பதால், விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யப்படாமல் பல நாட்கள் தேங்கிக் கிடப்பதால் நெல் மூட்டைகள் அதிக அளவில் காய்த்து எடை குறைந்து வருகிறது. இதனால், பட்டியல் எழுத்தர் மற்றும் நிலைய பொறுப்பாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்க இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன், ஏற்கனவே பருவம் தவறிய மழையால் வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் அழுகியும், மழையோடு போன நிலையில், எஞ்சி மிதமிஞ்சியுள்ள நெல்லையாவது விற்பனை செய்துவிடலாம் என கருதி, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளோடு வரும் விவசாயிகள் காத்துக்கிடக்கும் அவலநிலை தொடர்ந்து நீடிக்கிறது. நெல்லுக்கான ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை கண்டுக்கொள்ளாத நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகமும் ஒவ்வொரு மையங்களுக்கும் லாரிகளை தடையின்றி அனுப்புவதோடு, தேவையான அளவு சாக்கு, சணல்களை விநியோகிக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை மேலும் சோதிக்காமல் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.