தஞ்சாவூர், ஆக.7 - வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது. உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், உயர்மட்ட கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகியவற்றில் கடந்த ஆண்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பாசனம் பாதிக்கப்பட்டது. எனவே, இதனை தூர்வாரி குமிழி, ஷட்டர், மதகுகளை பழுது நீக்கி சீரமைத்து தர வேண்டும். முன்கூட்டியே முறையாக தண்ணீர் திறந்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில், தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆகஸ்ட் 8 (வியாழக்கிழமை) அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை செங்கிப்பட்டியில் பூதலூர் வட்டாட்சியர் மரியஜோசப் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், “15 நாட்களுக்குள் தேவையான மராமத்து பணிகளை செய்து, அனைத்து ஏரிகளையும் நிரப்பி, இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர். மற்ற கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்” என உறுதி அளித்தனர். இதையேற்று ஆக.8 (வியாழக்கிழமை) அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தரப்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் அனைத்து கிராம விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.