திண்டுக்கல்,பிப். 28 திண்டுக்கல்லில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி சார்பாக 66வது தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 24 ஆம் தேதி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் துவங்கியது. இந்தப் போட்டியானது 5 நாட்கள் நடைபெற்றது. இந்தப்போட்டியில் தமிழ்நாடு கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மும்பை, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட 17 மாநிலங்களில் இருந்து 800 வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் ,பெண்களுக்கு என தனித்தனியாக போட்டி நடைபெற்றது. திங்களன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு 35-31, 35-28 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. அதே போல் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு 35-24, 35-18 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டிலும் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிகளுக்கு கிரிஸ்டல் சுழற் கோப்பையும் ரூ 3 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை பிஎஸ்என்ஏ கல்லூரி இயக்குனர் ரகுராம் மற்றும் அவரது மகன் சூர்யா ரகுராம் வழங்கினர்.