districts

img

ஏரியை ஆக்கிரமித்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள் போராட்டம்

தஞ்சாவூர், ஜூன் 4- தஞ்சாவூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மனைக்கட்டு அமைத்து விற்பனை செய்யும் முயற்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியை ஆக்கிரமித்து சுமார் 53 ஏக்கர் பரப்பளவில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வீட்டு மனைகளை அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.  இதற்காக அங்கு சாலை அமைக்கும் பணியும், வீட்டு மனைகளை சுற்றி சிமெண்ட் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஏரியை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் மனை அமைக்கும் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கிராம பொது மக்கள் ஒன்று திரண்டனர்.  பின்னர் அவர்கள் அயோத்திப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், சுற்றுச்சுவர் அமைப்பதற்காக நடப்பட்டிருந்த சிமெண்ட் கற்களை பிடுங்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 இதில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மூத்த தோழர் ஏ.ஜி.தங்கவேலு, கிளை செயலாளர்கள் சந்திரபோஸ், காமராஜ், அயோத்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா கார்த்தீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது, ‘‘வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏரி இருந்ததாகவும் அதனை அதிகாரிகள் அளவீடு செய்து முறைப்படுத்திய பின்னரே மற்ற நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.  இதையடுத்து அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வேலி அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர் அமைதியாக கலைந்து சென்றனர்.

;