districts

தூர்வாரும் பணிகளை உடனே தொடங்குக! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

 தஞ்சாவூர், மார்ச் 30-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
என்.வி.கண்ணன் (த.வி.ச மாவட்டச் செயலாளர்): பல வாய்க்கால்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால், பணியை இப்போதே தொடங்கினால், தண்ணீர் வருவதற்குள் முடித்துவிடலாம் என்றார்.
பி.செந்தில்குமார் (த.வி.ச மாவட்டத் தலைவர்): திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால், போராட்டமும் தொடர்கிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,000, இதர பயிர்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ்: கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 195 வீதம் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, உடனடியாக அரசாணை வெளியிட்டு, விவசாயிகளுக்கு விரைவில் பணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

;