தஞ்சாவூர், மார்ச் 14 - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கோடைகால கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின், உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி ஏப்ரல் மாதம், சென்னையில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற உள்ளது. மாநில அளவிலான இக்கண்காட்சியில் ஒவ்வொரு நிதியாண்டும், முதற்கட்டமாக விடுமுறை காலத்தையொட்டி ‘சித்திரை கொண்டாட்டம்’ என்கின்ற பெயரில் நடத்தப்படுகிறது. இக்காலக் கட்டத்தில், விடுமுறை காலத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கண்காட்சியை பார்வையிட ஏதுவாக அமைகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ள விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் சுயக் குறிப்பு (பயோடேட்டா), மகளிர் சுய உதவிக்குழுவின் விவரங்கள், உற்பத்தி செய்யும் பொருட்கள் மாதிரி மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களை 23.3.2022-க்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம் அறை எண்: 223 மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தஞ்சாவூர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.