districts

img

பூம்புகார் கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது ரூ.20 லட்சம் விற்பனை இலக்கு: ஆட்சியர்

தஞ்சாவூர், செப்.7-  தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  ‘பூம்புகார்’ என்ற பெயரில் செயல்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம், கைவினைக் கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.  இந்நிலையில், நவராத்திரி பண்டிகையையொட்டி செப்.2 முதல் அக்.6 வரை ஞாயிறு உட்பட அனைத்து தினங்களிலும், தினமும் காலை 10 முதல் மாலை 8 மணி வரை கண்காட்சி விற்பனை நடைபெற்று வருகிறது. கொலு பொம்மைகளுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவை கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை இலக்கு எதிர்பார்க்கப்படுகிறது.  மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்டபைரவர்கள், நவக்கிரகங்கள், அத்திவரதர், தசாவதாரம், அஷ்டலட்சுமி, கிரிவலம், திருமலை, கோபியர், தர்பார், மைசூர் தசரா உள்ளிட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுதில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பொம்மைகளாக கல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிக்கோப்பா பொம்மைகள், ட்ரெஸ்ஸிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;