தஞ்சாவூர், ஆக.12 - நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கில், கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பூலுவப்பட்டி மோளப்பாளையத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் புதிய கற்காலச் சான்றுகளைக் கண்டு பிடித்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் கூறிய தாவது:
இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் கி.மு. 1600-1400 ஆண்டுகளுக்கிடையே வாழ்ந்த புதிய கற்கால மக்களின் தொல்லியல் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் இடம் தமிழ்ப் பல்கலைக் கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால் 2021 இல் அகழப்பட்டது.
மீண்டும் 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கு வாழ்ந்த தொடக்க நிலைப் பண்பாடுகளைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன. இந்த அகழாய்வு, கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் வீ.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு இத்தொல்லியல் இடத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளவும், முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அகழாய்வு மேற் கொள்ளப்பட்டது.
இந்த அகழாய்வில் மூன்று மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அள வில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ் சல், அம்மிக் கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானை கள், கடற்சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுடெடுக்கப்பட் டுள்ளன.
தக்காணக் கல்லூரியின் மானுடவி யல் அறிஞர் வீணா முஷ்ரீப் திரிபாதி மனித எலும்புகளை ஆராய்ந்து, இவை 3 இலிருந்து 7 வயதுக்குட்பட்ட குழந் தைகள், நடுத்தர வயதுப் பெண் ஒரு வரின் எலும்புகள் என அடையாளப் படுத்தியுள்ளார். இந்த அகழாய்வில் கிடைத்த மாட்டு எலும்புகள், ஆடு களின் எலும்புகள், காட்டு விலங்கு எலும்புகளை கேரளப் பல்கலைக்கழ கத்தின் முனைவர் ஜி.எஸ்.அபயன் அடையாளப்படுத்தினார். வெண்சங்கு, உருளைச் சங்கு போன்றவற்றால் செய்யப்பட்ட மணிகளை புனே தக்கா ணக் கல்லூரியின் முனைவர் ஆர்த்தி தேஷ்பாண்டே முகர்ஜி அடையாளப் படுத்தினார்.
நன்னீர் சிப்பியில் கலை நயத்து டன் செய்யப்பட்ட ஒரு மீன் வடிவப் பதக்கம் அவர்களது அழகியலை உணர்த்துகிறது. இதன் துடுப்புகளும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தாவரச் சான்றுகள் கரிந்த விதைகளாகவும், கொள்ளு, உளுந்து, பச்சைப்பயிறு, அவரை போன்ற தாவ ரங்களின் விதைகளும் கண்டுடெடுக்கப் பட்டுள்ளன. இவற்றை தக்காணக் கல்லூரியின் முனைவர் சதீஷ் நாயக் அடையாளப்படுத்தியுள்ளார்.
இத்தொல்லியல் இடத்தின் காலம் இரண்டு கரியமிலக் காலக்கணிப்பின் (Carbon Dating ) வாயிலாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இக்காலக் கணிப்பு அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வகத்தில் பெறப் பட்டது. 2024இல் ஜூன் முதல் ஜூலை வரை இரண்டாம் பருவ அக ழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய் வில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் வாழ்விடச் சான்று கள், தரையிலிருந்து 80 முதல் 140 செ.மீ வரை கிடைத்துள்ளன. இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்கள் பல குழிகளைத் தோண்டி அவற்றைச் சேமிப்புக் கிடங்குகளாகவும் பிற செயல் பாடுகளுக்காகவும் பயன்படுத்தி யுள்ளனர்.
வேளாண்மை செய்து வாழ்வு
இக்குழிகளில் கரிந்த விதைகள், எலும்புகள், கற்கருவிகள், பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. அகழாய்வுக் குழிகளில் மூன்று மெரு கேற்றப்பட்ட கற்கோடரிகள் கண்டு டெடுக்கப்பட்டன. ஒரு மனித ஈமச்சின்னம், பானை ஓடுகள், வளர்ப்பு, காட்டு விலங்குகளின் எலும்புகள், மான் கொம்புகள், கல் உருண்டைகள், அர வைக் கற்கள், கடற் கிளிஞ்சலால் செய்யப்பட்ட மணிகள், பதக்கங்கள், சுடுமண் பொருள்கள், மெருகேற்றப் பட்ட கருப்பு, சிவப்பு பானை வகைகள், குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட பிளேடுகள், பிறைச் சந்திரன் வடிவ நுண்கற்கருவிகள், கரிந்த சுடுமண் கட்டிகள் போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இம்மக்கள் வேளாண்மை செய்து ஆடு, மாடு வளர்த்து வாழ்ந்து வந்துள் ளனர். மோளப்பாளையத்தின் புதிய கற் காலத் தொல்லியல் இடத்தைச் சுற்றி மலைகள் அரண் போல அமைந்து உள்ளன. நொய்யல் ஆற்றிலிருந்து தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மாடுகளின் பட்டிகளை அமைக் கவும், வேளாண்மை செய்யவும் பொருத்தமாக இருந்தது. இந்த இடத் தின் சுற்றுச்சூழல் வளத்தின் காரண மாக புதிய கற்கால மக்கள் இவ்வி டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பானை ஓடுகள், எலும்புகளே முக்கியம்
தமிழ்நாட்டில் பல தொல்லியல் இடங்கள் மெருகேற்றப்பட்ட கோடரியை வெளிப்படுத்தியிருந்தா லும், அவை அனைத்தும் புதிய கற்கால இடங்கள் என்று கருத முடியாது. பானை ஓடுகள், எலும்புகள் உள்ளிட்ட வாழ்விடச் சான்றுகள் இருந்தால் மட்டுமே புதிய கற்கால இடங்களை தெளி வாக அடையாளப்படுத்த இயலும்.
இந்த அகழாய்வின் வழி, மேற்கு தமிழ்நாட்டில் முதன்முதலாக தெளி வான புதிய கற்காலச் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வட பகுதியில் இந்திய அரசு தொல்லியல் துறை பையம்பள்ளியிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பூதிநத்தம் சென்னானூர் போன்ற இடங்களிலும், சென்னைப் பல்கலைக்கழகம் வலசை, செட்டிமேடு போன்ற இடங் களிலும் புதிய கற்காலச் சான்றுகளை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அகழாய்வு தென்னிந்திய புதிய கற்கால மக்களின் வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தியுள்ளது, தென்னிந்தியாவில் புதிய கற்காலச் சான்றுகள் கர்நாடகா, ஆந்திரா, வட தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தெளிவாகக் கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வின் மூலம், நீர்வளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது. தென் னிந்திய புதிய கற்காலம் கி.மு.3000 - கி.மு 1200-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. மோளப்பாளை யத்தில் கிடைத்த சான்றுகள் இப்பண் பாட்டின் இறுதிக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளும், தென்மேற்குப் பருவமழையின் சாரலும், நொய்யல் சிறுவாணி தண்ணீ ரும் கோவை நகரை இன்று வளப் படுத்துவது போல, அக்காலத்தில் சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் மோளப்பாளையத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியுள்ளன.
சங்கு மணி - முக்கிய கண்டெடுப்பு
இத்தொல்லியல் இடத்தின் முக்கிய மான கண்டெடுப்பு, இங்கு கிடைத்த கடற்படுபொருள்களான சங்கு மணி களாகும். இவை 3600 ஆண்டு களுக்கு முன்னர், குறிஞ்சி நிலம் மட்டுமல்லாமல் நெய்தல் நிலவ மைப்பும், முல்லை நிலவமைப்பும் உருவாகி இவ்விரு நிலங்களுக்கி டையே பரிமாற்றம் நடந்திருந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன.
மோளப்பாளையத்தில் கிடைத்த தொல்பொருள்கள் தற்போது மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.