districts

img

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை ஒன்றிய அமைச்சர் மகனுக்கு பிணை வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.21 - உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகன் குற்றவாளி ஆஷிஸ் மிஸ்ராவை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.  பிணையை நீதிமன்றம் ரத்து செய்து, அவரை சிறையில் அடைக்க வேண்டும். ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் கண்டன உரையாற்றினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் பி.செந்தில்குமார், வீரமோகன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரம் காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் முத்துக்குமார், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.