districts

img

சேலம் - விருதாச்சலம் இடையே  விரைவில் பயணிகள் ரயில் சேவை

சேலம் - விருதாச்சலம் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், விரைவில் பயணிகள் ரயில் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.  

சேலம் விருதாச்சலம் இடையிலான 136 கிலோ மீட்டர் தொலைவு கேஜல் ரயில்பாதையை 2007ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. இந்தநிலையில், அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணி 2020ம் ஆண்டு 200 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் செவ்வாயன்று இந்த பாதையில் தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு மேற்கொண்டார்.  

இதனை தொடர்ந்து புதனன்று இந்த ரயில்பாதையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் மின்பாதையில் உள்ள தடைகளை கண்டறியும் பணி நடைபெற்றது. நண்பகல் 12.05 மணியளவில் விருதாச்சலத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், சின்னசேலம், ஆத்தூர், ஏத்தாப்பூர், வாழப்பாடி, முத்தம்பட்டி, அயோத்தியாபட்டணம், டவுன் ரயில் நிலையம் வழியாக சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு மதியம் 2.10 மணியளவில் வந்தடைந்தது. இந்த ரயிலில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், மின்பொறியாளர் மேத்தா ஆகியோர் பயணம் செய்தனர்.  

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய மின் பாதையில் பயணிகள் ரயில் சேவை தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். இதன்மூலம் ஏற்கனவே இருந்த பயண நேரத்தில் அரை மணி நேரம் குறையும். தற்போது,சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

;