சென்னை,டிச.11- கனமழை காரணமாக விவசாய தொழிலாளர்கள் தோட்ட வேலைக்கு செல்லாததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துவிட்டது. ஞாயிறன்று தக்காளி 39 லாரிகள், வெங்காயம் 50 லாரிகள் என மொத்தம் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று வெள்ளியன்று ஒரு கிலோ ரூ.13க்கு விற்ற தக்காளி விலை அதிகரித்து ரூ.22க்கும், ஒரு கிலோ ரூ.10க்கு வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டாத பீன்ஸ் மற்றும் உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது . இதேபோல் ஒரு கிலோ ரூ100-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.150-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ.45-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், கிலோ ரூ.7-க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.15-க்கும், ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், ரூ.10க்கு விற்ற காலிஃபிளவர் ஒன்று ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பச்சை காய்கறிகளின் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து இருப்பது ஏழை எளிய மக்களை கவலை அடைய செய்துள்ளது.