districts

விவசாய நிலத்தில் வீட்டுமனைப் பிரிவு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, மே 7 - நீர்நிலைகள், விவசாய நிலங்களில் வீட்டுமனைப் பிரிவு அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், திருபெரும்புதூர் வட்டம் எழுச்சூர் கிராமத்தில் பெரிய ஏரி, இரண்டு குட்டைகள் மற்றும் அவற்றை ஒட்டிய விவசாய நிலங்களை நத்தம் நிலமாக மாற்றப்பட்டுள்ளது. 60 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் வீட்டுமனைப் பிரிவை அமைக்க சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஜூப்ளி பிளாட்ஸ் என்ற நிறுவனத்திற்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு நகரமைப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. பொதுப் பணித்துறை மற்றும் கீழ் பாலாறு பாசனப் படுகை ஆகியவற்றின் கட்டுப்பட்டில் இருந்த இந்த விவசாய நிலத்தை வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும். எனவே, வீட்டுமனைப்பிரிவு அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதுவரை மனைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆனந்தி அமர்வு விசாரித்தது. வழக்கு குறித்து தமிழக அரசு துறைகள் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

;