districts

img

திருப்பத்தூரில் கன மழையால் குடியிருப்புகளை சூழ்ந்தது மழைநீர் பாலாற்றில் மீண்டும் வெள்ளம்

திருப்பத்தூர், ஜூன் 18 - பெய்த தொடர் மழையால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியம் பகுதி 1, பகுதி 2 ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் குடி யிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அந்த பகுதிக்கு தீ அணைப்பு வீரர்கள் வந்து படகு மூலம் மீட்டனர். இந்நிலையில் அந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டார். உடன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.நல்லதம்பி, வரு வாய் கோட்டாட்சியர் லட்சுமி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகரமன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மழைநீர் வடிகால்வாய்களை முறையாக பராமரிக்காததே குடி யிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்க காரணம் என்றும், உடனடியாக கால்வாய் அடைப்புகளை சரி செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலாற்றில் வெள்ளம்
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையான குப்பம் கணேசபுரம், பெரும்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திராவின் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் வாணியம்பாடி பாலாற்றில் கலந்து வருகிறது. அதேபோல் திம்மாம்பேட்டை மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் ஆவாரம் குப்பம் வழியாக வரும் காட்டாற்று வெள்ளம் பாலாற்றில் கலந்து புல்லூர் தடுப்பணை மற்றும் திம்மாம்பேட்டை வெள்ளம் பாலாற்றில் கலந்து பெரும் வெள்ளமாக பாய்ந்தோடி வருகிறது. இதனால் அம்பலூர், கொடை யாஞ்சி பாலாற்றில் நீர்வரத்து அதி கரித்ததால் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது. ஆம்பூர் பள்ளிகொண்டா வேலூரை நோக்கி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாலாற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் ஊராட்சி சாலை நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள பகுதியில் சிறிது தூரத்திற்கு குடியிருப்புகளின் ஓரம் தாழ்வான நிலையில் தார்சாலை அமைத்துள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் மழைநீர் குளம்போல்தேங்கி நின்றது. மேலும் இங்குள்ள குடியிருப்பு களில் மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் குடியிருப்பை கடந்து சாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாழ்வான சாலையை அமைத்து குடியிருப்புக்குள் மழை நீர் வருவதாகக் கூறி சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வந்து சாலை யோரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே குளம்போல் தேங்கி நின்ற மழை நீரை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

;