districts

திருநங்கைகளை கொண்டு டிரோன்களை இயக்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை, ஜூன் 10- சென்னை மாநகராட்சியில் கூவம், அடையாறு ஆகிய ஆறுகள் உள்ளன. மேலும் பக்கிங்காம் கால்வா யும் உள்ளது. இதில் கூவம் ஆற்றுடன் 8 கால்வாய்கள், அடையாறு  ஆற்றுடன் 23 கால்வாய்கள், பக்கிங்காம் கால்வாயின் 21 கால்வாய்கள் என மொத்தம் 52 இணைப்பு  கால்வாய்கள் 234 கி.மீட்டர் நீளத்துக்கு அமைந் துள்ளன.  இந்த நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்பு பணியில் சோதனை அடிப்படையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.  இந்த பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மைய டிரோன் பயிற்சி நிலையம் சார்பில் வாடகைக்கு எடுத்து பணிகள் நடைபெற்றன.  இந்த டிரோன்கள் மூலம்  கூவம் ஆற்றில்  கொசுப்புழு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன. மனிதர்களால் செல்ல முடியாத சேற்றுப்பகுதிகளிலும் டிரோன்கள் மூலம் சுலபமாக மருந்து தெளிக்க முடிந்தது. டிரோன்களை வாடகைக்கு எடுப்பதால் அதிகமாக செலவாகிறது. எனவே சொந்தமாக டிரோன்களை வாங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 5 டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்களை உரிமம் பெற்ற திருநங்கைகளை கொண்டு இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.