districts

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு

மேல்மருவத்தூர். ஜன. 23- மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுவருவதால் வாகன காப்பகம் அமைக்க வேண்டும்  என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகி ராமசாமி தெற்கு ரயில்வே கோட்ட மோலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி வேலைக்கு செல்லக்கூடிய ரயில் பயணிகள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு கடந்த காலங்களில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகன காப்பகம் செயல்பட்டு வந்தது. கடந்த ஓராண்டு காலமாக ரயில் நிலையத்தில் இருசக்கர வாகன காப்பகம் இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் தினசரி இருசக்கர வாகனங்கள் ரயில் நிலையத்தில் திருடப்படுகின்றன. ரயில் பயணிகளின் வாகன பாதுகாப்பு கருதி இருசக்கர வாகன காப்பகம் அமைக்க  நடவடிக்கை எடுத்திட வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.